மதிய உணவு இடைவேளை: ஆஸ்திரேலியா அணியை திணறடித்த அஸ்வின், ஷமி...!


மதிய உணவு இடைவேளை: ஆஸ்திரேலியா அணியை திணறடித்த அஸ்வின், ஷமி...!
x

image courtesy: BCCI twitter

தினத்தந்தி 9 March 2023 11:50 AM IST (Updated: 9 March 2023 11:53 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி 75 ரன்கள் எடுத்துள்ளது.

ஆமதாபாத்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூர், டெல்லியில் நடந்த முதல் இரு டெஸ்டுகளில் இந்தியாவும், இந்தூரில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனியுடன் பிரதமர் மோடி இணைந்து பார்த்து வருகிறார். அவரது வருகையையொட்டி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த நிலையில் உணவு இடைவேளை வரை 29 ஓவர்களில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 75 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். லபுஸ்சேன் 3 ரன்களில் அவுட்டானார்.

மற்றொரு தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா 27 ரன்களுடனும் கேப்டன் ஸ்டீவன் சுமித் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் முகமது ஷமி மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.

1 More update

Next Story