சச்சினுக்கு பிறகு அவர் விளையாடுவதை பார்க்க தான் ஆர்வமாக உள்ளேன் - இளம் வீரருக்கு கவாஸ்கர் பாராட்டு


சச்சினுக்கு பிறகு அவர் விளையாடுவதை பார்க்க தான் ஆர்வமாக உள்ளேன் - இளம் வீரருக்கு கவாஸ்கர் பாராட்டு
x

Image Courtesy : AFP 

இந்திய அணியின் இளம் வீரருக்கு கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர். டெஸ்ட் போட்டிகளில் பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ள இவர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். "கிரிக்கெட்டின் கடவுள் " என கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு முன்பே கிரிக்கெட் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் கவாஸ்கர்.

இந்த நிலையில் இவர் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு உம்ரான் மாலிக் விளையாடுவதை பார்க்க தான் ஆர்வமாக உள்ளேன் என தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியில் விளையாடிய உம்ரான் மாலிக் தோனி போன்ற முன்னணி வீரர்களுக்கு எதிராக அசுர வேகத்தில் பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்.

தொடர்ந்து 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசும் இவர் நடந்து முடிந்த ஐபிஎல்-லில் 157 கிமீ வேகத்தில் வீசிய பந்துதான், சீசனின் 2வது அதிவேக பந்தாகும். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் பிளெயிங் லெவனில் உம்ரான் மாலிக்-கிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் பல முன்னாள் வீரர்கள் இவரை அணியில் தேர்வு செய்யும்படி ஆலோசனை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் உம்ரான் மாலிக் குறித்து கவாஸ்கர் கூறுகையில், " கடைசியாக ஒரு இந்திய வீரரைப் பார்த்து நான் மிகவும் ஆர்வமடைந்தேன் என்றால் அது சச்சின் டெண்டுல்கரை பார்த்து தான். அதன் பிறகு உம்ரான் மாலிக் விளையாடுவதை பார்க்க ஆர்வமாக உள்ளேன். அவர் விரைவில் விளையாட வேண்டும்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெல்ல வேண்டும் என்பதால் அதற்கு அடுத்து வரவிருக்கும் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்குவது பற்றி அணி நிர்வாகம் யோசிக்க கூடும்" என தெரிவித்தார்.


Next Story