முக்கியமான ஆட்டத்தில் லக்னோ-மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் லக்னோ-மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
லக்னோ,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த 20 ஓவர் திருவிழாவில் லக்னோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 63-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த சீசனில் லக்னோ அணி 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி இனி வரும் தனது 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி கண்டால் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற முடியும். மாறாக ஒரு ஆட்டத்தில் வெற்றியும், மற்றொன்றில் தோல்வியும் காணும் பட்சத்தில் மற்ற அணிகளின் முடிவு சாதகமாக அமைந்தால் நிகர 'ரன்-ரேட்' பிரச்சினையின்றி அடுத்த சுற்றுக்குள் கால்பதிக்க வாய்ப்புள்ளது.
வெற்றி, தோல்வியை மாறி, மாறி சந்தித்து வரும் லக்னோ அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் காயம் காரணமாக போட்டி தொடரில் இருந்து விலகியதால் அந்த அணியை ஆல்-ரவுண்டர் குருணல் பாண்ட்யா வழிநடத்தி வருகிறார். முந்தைய ஆட்டத்தில் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த போட்டியை சந்திக்கிறது. லக்னோ அணியில் பேட்டிங்கில் கைல் மேயர்ஸ் (4 அரைசதத்துடன் 361 ரன்கள்), நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, குயின்டான் டி காக்கும், பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், அவேஷ் கான், நவீன் உல்-ஹக், அமித் மிஸ்ரா, யாஷ் தாக்குரும், ஆல்-ரவுண்டராக கேப்டன் குருணல் பாண்ட்யா, மார்கஸ் ஸ்டோனிசும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
5 முறை சாம்பியனான மும்பை அணி 12 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி தனது எஞ்சிய 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றை உறுதி செய்வதுடன் 'டாப்-2' இடங்களுக்குள் முன்னேற முடியும். இதில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குள் நுழைய மற்ற அணிகளின் முடிவை சார்ந்து இருக்க வேண்டியது வரும்.
முதலில் சற்று தடுமாறிய மும்பை அணி தற்போது நல்ல பார்மை எட்டியிருக்கிறது. கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி கண்டு இருக்கும் அந்த அணி முந்தைய 2 லீக் ஆட்டங்களில் பெங்களூரு, குஜராத் அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்த உத்வேகத்துடன் உள்ளது. பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 479 ரன்கள்), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், கேப்டன் ரோகித் சர்மா, நேஹல் வதேராவும், பந்து வீச்சில் பியுஷ் சாவ்லா, பெரன்டோர்ப், ஆகாஷ் மாத்வாலும் நல்ல நிலையில் உள்ளனர். இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. லக்னோ ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமானதாகும். சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வதை பொறுத்தே அணியின் வெற்றி அமையும் எனலாம்.
ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரண்டு தடவையும் லக்னோ அணியே வெற்றி பெற்றுள்ளது. போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: கைல் மேயர்ஸ், குயின்டான் டி காக், பிரேராக் மன்கட், மார்கஸ் ஸ்டோனிஸ், நிகோலஸ் பூரன், குருணல் பாண்ட்யா (கேப்டன்), யாஷ் தாக்குர், ரவி பிஷ்னோய், யுத்விர் சிங், அவேஷ் கான், ஆயுஷ் பதோனி.
மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன், ரோகித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், நேஹல் வதேரா, விஷ்ணு வினோத், டிம் டேவிட், கேமரூன் கிரீன், கிறிஸ் ஜோர்டான், பியுஷ் சாவ்லா, பெரன்டோர்ப், குமார் கார்த்திகேயா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.