கடைசி ஓவரில் பரபரப்பு - கொல்கத்தாவை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ பிளே ஆப் சுற்றுக்கு தகுதி ..!


கடைசி ஓவரில் பரபரப்பு - கொல்கத்தாவை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ பிளே ஆப் சுற்றுக்கு தகுதி ..!
x

image courtesy: IPL twitter

கொல்கத்தா அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசன், மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் சுற்றை நோக்கி நகர்ந்து வருகிறது. நவி மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் இன்று நடைபெற்ற 66-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

லக்னோ அணி பிளே ஆப் வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துள்ள போதும் இன்று வெற்றி பெறும் பட்சத்தில் அதிகாரபூர்வமாக உறுதி செய்யும். அதே நேரத்தில் கொல்கத்தா அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக கேப்டன் கே எல் ராகுல் - குயின்டன் டி காக் களமிறங்கினர்.

பவர் பிளே முதலே இருவரும் எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக குயின்டன் டி காக் சிக்சர் மழை பொழிந்தார். இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சௌதீ வீசிய 19-வது ஓவரில் ராகுல் - டி காக் ஜோடி 4 சிக்சர்களை விளாசினர். இறுதி ஓவரை ரசல் வீச அந்த ஓவரில் டி காக் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகள் அடித்து நொறுக்கினார்.

இறுதியில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் குவித்தது. டி காக் 70 பந்துகளில் 140 ரன்கள் அடித்தார். ராகுல் 51 பந்துகளில் 68 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 211 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் ரன் ஏதும் எடுக்காமலும் அபிஜித் தோமர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் - நிதிஷ் ராணா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர்.

சிறப்பாக ஆடிவந்த ராணா 42 ரன்களில் நடையை கட்ட ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 77 ரன்கள் தேவைப்பட்டது. முக்கிய வீரர்கள் அவுட்டாகிய சூழ்நிலையில் 7-வது விக்கெட் பாட்னர்ஷிப்புக்கு ரிங்கு சிங் - சுனில் நரேன் ஜோடி அதிரடி காட்டினர்.

இறுதி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் ரிங்கு சிங் பவுண்டரி அடித்தார். 2-வது பந்தில் அவர் சிக்சர் விளாச போட்டியில் பரபரப்பு தொற்றி கொண்டது. கடைசி 4 பந்தில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட 3-வது பந்திலும் சிக்சர் பறந்தது. 4-வது பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. 5-வது பந்தில் ரிங்கு சிங் கவர்ஸ் திசையில் அடிக்க முயற்சிக்க அந்த பந்தை ஏவின் லீவிஸ் அற்புதமாக கேட்ச் பிடித்து அசத்தினார்.

இறுதி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட அந்த பந்தை எதிர்கொண்ட உமேஷ் யாதவ் போல்டானார். இதனால் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதோடு லக்னோ அணி 18 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கும் அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது.


Next Story