கடைசி நாள் ஆட்டம்: உச்சகட்ட பரபரப்பில் ஆஷஸ் டெஸ்ட்: அதிரடி சதத்துடன் களத்தில் பென் ஸ்டோக்ஸ்


கடைசி நாள் ஆட்டம்: உச்சகட்ட பரபரப்பில் ஆஷஸ் டெஸ்ட்: அதிரடி சதத்துடன் களத்தில் பென் ஸ்டோக்ஸ்
x

2-வது ஆஷஸ் டெஸ்ட் லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

லண்டன்,

உலகின் மிகவும் பிரபலமான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஷஸ். இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரே ஆஷஸ் என அழைக்கப்படுகிறது.

இதனிடையே, நடப்பு ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 5 டெஸ்ட்கள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், 2வது ஆஷஸ் டெஸ்ட் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்றும் இப்போட்டியில் முதல் இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 91 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சில் ஆடியது.

2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியே 279 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இங்கிலாந்திற்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 371 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்துக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் ஸ்கோர் 9 ரன்கள் என்ற நிலையில் முதல் விக்கெட் வீழ்ந்தது. 13 ரன்களுக்கு 2வது விக்கெட்டும், 41 ரன்களுக்கு 3வது விக்கெட்டும் 45 ரன்களுக்கு 4வது விக்கெட்டும் வீழ்ந்தன. இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமானது.

இக்கட்டான சூழ்நிலையில் துவக்க வீரர் பென் டக்கெட் உடன் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்து பொறுப்பான மற்றும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.

டக்கெட் 50 ரன்களுடனும், ஸ்டோக்ஸ் 29 ரன்னிலும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து வெற்றிபெற இன்னும் 257 ரன்கள் தேவைப்பட்டது.

இந்நிலையில், 2வது ஆஷஸ் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கியது முதல் டக்கெட், ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடினர். டக்கெட் 83 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஜானி பெஸ்டோ சர்ச்சைக்குரிய வகையில் 10 ரன்னில் ரன் அவுட் ஆனார். அப்போது, இங்கிலாந்து 193 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.

ஆனாலும், மறுமுனையில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 142 பந்துகளில் சதம் விளாசினார். ஆட்டத்தின் கடைசி நாளான இன்று தற்போது மதிய உணவு இடைவேளை வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டோக்ஸ் 108 ரன்களுடனும், ஸ்டுவட் பிராட் 1 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

கடைசி நாள் ஆட்டத்தில் இன்னும் சில மணி நேரங்களே எஞ்சியுள்ள நிலையில் இங்கிலாந்து வெற்றிபெற இன்னும் 128 ரன்கள் தேவை, அதேபோல், ஆஸ்திரேலியா வேற்றிபெற இன்னும் 4 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆஷஸ் ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story