மேஜர் லீக் கிரிக்கெட்: பிராவோ அதிரடி வீண்.! டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் தோல்வி
வாஷிங்டன் அணி 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
கிராண்ட்பிராய்ரி,
6 அணிகள் இடையிலான மேஜர் லீக் 20 ஓவர் (எம்.எல்.சி.) கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கிராண்ட்பிராய்ரி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் வாஷிங்டன் பிரீடம்-டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த வாஷிங்டன் பிரீடம் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் 80 ரன்கள் (50 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) குவித்தார்.
அடுத்து ஆடிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. இருப்பினும் 7-வது வரிசையில் களம் கண்ட வெய்ன் பிராவோ அதிரடியாக ஆடி அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினார். கடைசி ஓவரில் சூப்பர் கிங்சின் வெற்றிக்கு 27 ரன்கள் தேவையாக இருந்தது. ஆனால் அந்த ஓவரில் 20 ரன்களே எடுக்க முடிந்தது. 20 ஓவர்களில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுக்கு 157 ரன்களே எடுத்தது. இதனால் வாஷிங்டன் அணி 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 76 ரன்கள் (39 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்) நொறுக்கிய வெய்ன் பிராவோவின் அதிரடி வீணானது. 2-வது ஆட்டத்தில் ஆடிய சூப்பர் கிங்சுக்கு இது முதல் தோல்வியாகும். வாஷிங்டன் அணிக்கு முதல் வெற்றியாகும்.