மேக்ஸ் ஓ டாவ்ட் பெரிய சந்தர்ப்பங்களில் சிறப்பாக செயல்படுகிறார் - நெதர்லாந்து கேப்டன்


மேக்ஸ் ஓ டாவ்ட் பெரிய சந்தர்ப்பங்களில் சிறப்பாக செயல்படுகிறார் - நெதர்லாந்து கேப்டன்
x

image courtesy: ICC twitter

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி நெதர்லாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

அடிலெய்டு,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி நெதர்லாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டி தொடரில் அடிலெய்டில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் குருப்2-ல் அங்கம் வகிக்கும் ஜிம்பாப்வே-நெதர்லாந்து அணிகள் சந்தித்தன.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் வெஸ்லி மாதேவிர் ஒரு ரன்னிலும், கேப்டன் கிரேக் எர்வின் 3 ரன்னிலும், ரெஜிஸ் சகப்வா 5 ரன்னிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் அந்த அணி பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) 20 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்த சூழலில் ஆல்-ரவுண்டர் சிகந்தர் ராசா, சீன் வில்லியம்சுடன் இணைந்தார். இவர்கள் சற்று நேரம் தாக்குப்பிடித்து ஆடினர். மற்ற வீரர்கள் யாரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

19.2 ஓவர்களில் ஜிம்பாப்வே 117 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சிகந்தர் ராசா 40 ரன்னும் (24 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), சீன் வில்லியம்ஸ் 28 ரன்னும் (23 பந்து, 3 பவுண்டரி) எடுத்தனர். நெதர்லாந்து தரப்பில் பால் வான் மீகிரென் 3 விக்கெட்டும், பிரன்டன் குளோவெர், லோகன் வான் பீக், பேஸ் டி லீட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய நெதர்லாந்து அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ஸ்டீபன் மைபர்க் (8 ரன்) விரைவில் ஆட்டம் இழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் மேக்ஸ் ஓ டாவ்ட் (52 ரன்கள், 47 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), அடுத்து வந்த டாம் கூப்பர் (32 ரன்கள், 29 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகியோர் நேர்த்தியாக ஆடி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். பவுண்டரி அடித்து வெற்றி இலக்கை கடக்க வைத்த பேஸ் டி லீட் 12 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். 11-வது அரைசதம் விளாசிய நெதர்லாந்து வீரர் மேக்ஸ் ஓ டாவ்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

முதல் 3 ஆட்டங்களில் தோற்று ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்ட நெதர்லாந்து அணிக்கு இது முதல் வெற்றியாகும். 2-வது தோல்வியை சந்தித்த ஜிம்பாப்வே அணியின் அரைஇறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து போனது.

தோல்வி குறித்து ஜிம்பாப்வே கேப்டன் கிரேக் எர்வின் கூறுகையில், 'டாஸ் ஜெயித்து முதலில் பவுலிங் செய்வதா? அல்லது பேட்டிங்கை தேர்வு செய்வதா? என்று நாங்கள் குழம்பிய ஆட்டங்களில் இதுவும் ஒன்றாகும். நெதர்லாந்து அணியினர் பவர்பிளேயில் நேர்த்தியாக பந்து வீசி எங்களை நிலைகுலைய வைத்தனர். ராசா, வில்லியம்ஸ் ஆகியோர் சரிவில் இருந்து மீட்பதற்கு நன்றாக முயற்சி செய்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அதனை எங்களால் வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. எங்களது பந்து வீச்சு சிறப்பாக அமையவில்லை. எல்லா பாராட்டுகளும் நெதர்லாந்து அணிக்கே சேரும்' என்றார்.

வெற்றிக்கு பிறகு நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கூறுகையில் 'சூப்பர் 12 சுற்றில் சில ஆட்டங்களை வெல்வதற்காக நாங்கள் இங்கு வந்தோம். எங்களது பந்து வீச்சாளர்கள் அருமையாக செயல்பட்டு நல்ல தொடக்கம் அமைத்தனர். எங்களது தொடக்க வரிசை பேட்ஸ்மேன்கள் நன்றாக செயல்பட்டனர். மேக்ஸ் ஓ டாவ்ட் பெரிய சந்தர்ப்பங்களில் சிறப்பாக செயல்படுகிறார்' என்றார்.


Next Story