ஏமாற்றத்தில் முடிந்த ரன்-அவுட் முயற்சி: நடுவருடன் வாக்குவாதம் செய்த சிராஜ்- வைரல் வீடியோ


ஏமாற்றத்தில் முடிந்த ரன்-அவுட் முயற்சி: நடுவருடன் வாக்குவாதம் செய்த சிராஜ்- வைரல் வீடியோ
x

Image Courtesy: Screengrab     

நடுவரின் முடிவை ஏற்று கொள்ளாத சிராஜ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ராஞ்சி,

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை 1-1 என சமன் செய்தது. இதில் முகமது சிராஜ் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 10 ஓவர்கள் வீசிய அவர் 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்-யில் 48-வது ஓவரின் போது முகமது சிராஜ் பந்துவீச, தென் ஆப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் ஸ்ட்ரைக்கில் இருந்தார். 2-வது பந்தை மகாராஜ் அடிக்காமல் தவறவிட, அந்த பந்து கீப்பர் சஞ்சு சாம்சனிடம் சென்றது.

இதனால் மற்ற வீரர்கள் சகஜமாக இருக்க, நான் ஸ்ட்ரைக்கில் இருந்த டேவிட் மில்லர் பாதி கிரீஸுக்கு வெளியே வந்தார். அப்போது திடீரென சஞ்சு சாம்சன் பந்தை சிராஜிடம் கொடுக்க, அவர் ரன் அவுட் செய்யும் முனைப்பில் நான் ஸ்ட்ரைக்கர் ஸ்டம்ப்-ஐ நோக்கி பந்தை வீசினார்.

ஆனால் பந்து ஸ்டம்ப் மீது படவில்லை. அதே நேரத்தில் அதை பிடிக்க அந்த பகுதியில் வீரர்கள் இல்லாததால் பந்து பவுண்டரிக்கு சென்றது. இதனை கண்ட கள நடுவர் உடனடியாக ஓவர் த்ரோ எனக்கூறி 4 ரன்களை வழங்கினார். இதனை ஏற்று கொள்ளாத சிராஜ் நேராக நடுவரிடம் சென்று அவருடன் சில நொடிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஷ்ரேயஸ் ஐயர் வந்து சமாதானம் செய்ய சிராஜ் வழக்கம் போல் பந்துவீச சென்றார்.

இந்த நிலையில் தான் இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் சிராஜ் வீசிய பந்து ஒருவேளை ஸ்டம்பில் பட்டிருந்தால் மில்லர் ஆட்டமிழந்து இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story