டோனி ஒரு மேஜிக் கலைஞர்; வேண்டாம் என்று குப்பையில் எறியப்படும் பொருளையும் பொக்கிஷமாக உருவாக்கி விடுவார் - ஹைடன் புகழாரம்


டோனி ஒரு மேஜிக் கலைஞர்; வேண்டாம் என்று குப்பையில் எறியப்படும் பொருளையும் பொக்கிஷமாக உருவாக்கி விடுவார் - ஹைடன் புகழாரம்
x

டோனி, வேண்டாம் என்று குப்பையில் எறியப்படும் பொருளையும் எடுத்து பொக்கிஷமாக உருவாக்கி விடுவார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இலங்கையைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா விளையாடி வருகிறார். ரூ.20 லட்சத்திற்கு வாங்கப்பட்ட அவர் சென்னை அணியின் முக்கிய பந்து வீச்சாளராக திகழ்கிறார். மலிங்கா ஸ்டைலில் கைகளை அகல விரித்து வளைத்து வீசும் அவர் இந்த சீசனில் சிறந்த இறுதிகட்ட பந்து வீச்சாளர் என்று சொல்லும் அளவுக்கு கலக்கியிருக்கிறார். 11 ஆட்டத்தில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள பதிரானா இறுதி ஆட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பதிரானாவின் எழுச்சிக்கு டோனியே முக்கிய காரணம் என்பதில் சந்தேகமில்லை. அவரை நன்கு ஊக்குவிக்கும் டோனி, களத்தில் மிகச்சரியாக பயன்படுத்தி எதிரணியை மிரட்டுகிறார். அத்துடன் பதிரானாவின் கிரிக்கெட் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுகிறார். இதன் மூலம் சென்னை அணியில் அவரை நீண்டகாலம் வைத்திருக்க டோனி விரும்புவது தெளிவாகிறது. 'இலங்கை ரசிகர்களே, உங்களுக்காக டோனி ஒரு வைரத்தை பட்டை தீட்டிக்கொண்டிருக்கிறார்' என்று வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பதிரானாவின் குடும்பத்தினர் சென்னையில் டோனியை சந்தித்து உற்சாகமாக கலந்துரையாடினர். இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள பதிரானாவின் சகோதரி விஷூகா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் 'பதிரானா இப்போது பாதுகாப்பான கைகளில் இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறோம். பதிரானாவை பற்றி கவலைப்பட வேண்டாம், அவர் எப்போதும் என்னுடன் இருப்பார் என்று 'தல' டோனி எங்களிடம் கூறினார். இது போன்ற தருணங்களை நாங்கள் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை' என்று உருகியுள்ளார்.

இதற்கிடையே, இது போன்ற அனுபவம் இல்லாத வீரர்களையும் கைதேர்ந்த வீரர்களாக உருவாக்கும் டோனிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில், 'டோனி ஒரு மேஜிக் கலைஞர். வேண்டாம் என்று குப்பையில் எறியப்படும் பொருளையும் எடுத்து பொக்கிஷமாக உருவாக்கி விடுவார். அவர் மிகவும் ஆக்கப்பூர்வமான, நேர்மறையான ஒரு கேப்டன். சென்னை அணியின் வலுவான கட்டமைப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பின்னால் டோனியின் ஈடுஇணையற்ற பங்களிப்பு உள்ளது. எல்லாவற்றையும் சரியான வழியில் முறையாக கையாளும் அவர் முன்பு இந்திய அணிக்காக என்ன செய்தாரோ அதையே இப்போது சென்னை சூப்பர் கிங்சுக்காக செய்து கொண்டிருக்கிறார்.

டோனி அடுத்த ஆண்டு ஐ.பி.எல்-ல் விளையாடுவாரா இல்லையா என்பதை பற்றி பேசுவது தேவையற்றது. ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் விளையாடுவார் என்று நினைக்கவில்லை. முடிவு டோனியின் கையில் தான் உள்ளது' என்றார்.


Next Story