'உலகக் கோப்பை போட்டிக்கு தயாராக நிறைய ஓவர்கள் பந்து வீசியாக வேண்டும்' - ஹர்திக் பாண்ட்யா


உலகக் கோப்பை போட்டிக்கு தயாராக நிறைய ஓவர்கள் பந்து வீசியாக வேண்டும் - ஹர்திக் பாண்ட்யா
x

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது எல்லாமே சரியாகி விடும் என்று நம்புவதாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

பிரிட்ஜ்டவுன்,

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 40.5 ஓவர்களில் 181 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) டிரினிடாட்டில் நடக்கிறது.

தோல்விக்கு பிறகு இந்திய பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், 'நாங்கள் நினைத்த மாதிரி பேட்டிங் செய்யவில்லை. முதல் இன்னிங்சை காட்டிலும் 2-வது பேட்டிங்கின் போது ஆடுகளத்தன்மை நன்றாக இருந்தது. தோல்வி ஏமாற்றம் தான். ஆனால் நாங்கள் இன்னும் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

தொடக்க ஆட்டக்காரர்கள் குறிப்பாக இஷான் கிஷன் பேட்டிங் செய்த விதம் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. ஷர்துல் தாக்குர் சிறப்பாக பந்து வீசி கொஞ்சம் நம்பிக்கையை கொண்டு வந்தார். ஆனால் ஷாய் ஹோப்பும், கேசி கர்டியும் நெருக்கடியை திறம்பட சமாளித்து இலக்கை எட்ட வைத்து விட்டனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராக நான் நிறைய ஓவர்கள் பந்து வீசியாக வேண்டும். அதில் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகிறேன். உலகக் கோப்பை போட்டியின் போது எல்லாமே சரியாகி விடும் என்று நம்புகிறேன். இப்போது இந்த தொடர் 1-1 என்று சமநிலையில் இருப்பதால் கடைசி போட்டி அதிக சவாலுடன் ரசிகர்களுக்கும், எங்களுக்கும் உற்சாகமிகுந்த போட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.


Next Story