இப்போது 'ஈ சாலா கப் நம்து' - ஆர்.சி.பி கேப்டன் ஸ்மிருதி மந்தனா


இப்போது ஈ சாலா கப் நம்து  - ஆர்.சி.பி கேப்டன் ஸ்மிருதி மந்தனா
x

Image Courtesy: @RCBTweets

2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் ஆர்.சி.பி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு டெல்லியில் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், டெல்லி கேப்பிட்டல்சும் மோதின.

'டாஸ்' ஜெயித்த டெல்லி கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி 18.3 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது. பெங்களூரு தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரேயங்கா பட்டீல் 4 விக்கெட்டும், மோலினெக்ஸ் 3 விக்கெட்டும், ஆஷா சோபனா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

இதையடுத்து 114 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம் என களம் இறங்கிய பெங்களூரு 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

கோப்பையை வென்ற ஆர்.சி.பி மகளிர் அணிக்கு கிரிக்கெட் வீரர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பின் ஆர்.சி.பி கேப்டன் ஸ்மிருதி மந்தனா அளித்த பேட்டியில் கூறியதாவது,

உணர்வு இன்னும் குறையவில்லை. இந்த உணர்ச்சியில் இருந்து வெளிவருவது கடினமாக உள்ளது. ஆனால் நான் பெருமைப்படுகிறேன் என்ற விஷயத்தை சொல்கிறேன். பெங்களூருவில் விளையாடிய போட்டிகள் எங்களுக்கு நன்றாக இருந்தது. டெல்லிக்கு வந்ததும் நாங்கள் 2 மோசமான தோல்விகளை சந்தித்தோம்.

அப்போது சரியான நேரத்தில் முன்னேற வேண்டும் என்று பேசினோம். கடந்த ஆண்டு எங்களுக்கு எது சரி, எது தவறு என்பது போன்ற நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுத்தது. அணி நிர்வாகத்திற்கு தம்ஸ் அப். நான் மட்டும் கோப்பையை வெல்லவில்லை. மொத்த அணியும் கோப்பையை வென்றது. இது என்னுடைய டாப் 5 வெற்றியில் ஒன்றாக இருக்கும்.

கண்டிப்பாக ஒரு உலகக்கோப்பை முதலாவதாக இருக்கலாம். ஆர்.சி.பி ரசிகர்களிடமிருந்து 'ஈ சாலா கப் நம்தே' என்ற ஒரு கருத்து எப்போதும் வந்து கொண்டிருக்கும். இனிமேல் அது 'ஈ சாலா கப் நம்து' (இப்போது கோப்பை நம் வசம்). கன்னடம் என்னுடைய மொழி கிடையாது. ஆனால் இதை ரசிகர்களுக்கு சொல்வது முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story