ஒரு நாள் கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை 59 ரன்னில் சுருட்டி பாகிஸ்தான் வெற்றி


ஒரு நாள் கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை 59 ரன்னில் சுருட்டி பாகிஸ்தான் வெற்றி
x

ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானை 59 ரன்னில் சுருட்டி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

ஹம்பன்டோட்டா,

பாகிஸ்தான் 201 ரன்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை மண்ணில் மோதுகிறது. இதன்படி பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஹம்பன்டோட்டோவில் நேற்று நடந்தது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானின் சுழல் தாக்குதலில் திணறியது. பஹர்ஜமான் (2 ரன்), கேப்டன் பாபர் அசாம் (0), ஆஹா சல்மான் (7 ரன்) சீக்கிரம் நடையை கட்டினர். விக்கெட் சரிவுக்கு மத்தியில் இமாம் உல்-ஹக் (61 ரன், 94 பந்து, 2 பவுண்டரி), முகமது ரிஸ்வான் (21 ரன்), இப்திகர் அகமது (30 ரன்), ஷதப் கான் (39 ரன்), நசீம் ஷா (18 ரன்) கணிசமான பங்களிப்பை வழங்கி ஒரு வழியாக ஸ்கோர் 200-ஐ கடக்க வைத்தனர்.

முடிவில் பாகிஸ்தான் 47.1 ஓவர்களில் 201 ரன்னில் ஆட்டமிழந்தது. ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை, ஆப்கானிஸ்தான் ஆல்-அவுட் ஆக்கியது இதுவே முதல் முறையாகும். ஆப்கானிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் முஜீப் ரகுமான் 3 விக்கெட்டும், ரஷித்கான், முகமது நபி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடங்கியது ஆப்கானிஸ்தான்

அடுத்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களை, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் புரட்டியெடுத்தனர். இப்ராஹிம் ஜட்ரன், ரமத் ஷா, கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷகிடி வரிசையாக டக்-அவுட் ஆனார்கள். இந்த வீழ்ச்சியில் இருந்து நிமிர முடியாமல் முடங்கிய ஆப்கானிஸ்தான் 19.2 ஓவர்களில் வெறும் 59 ரன்னில் சுருண்டது. சர்வதேச ஒருநாள் போட்டியில் அந்த அணியின் 2-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். அதே சமயம் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோராக இது பதிவானது. ரமனுல்லா குர்பாஸ் (18 ரன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் (16ரன்) தவிர வேறு யாரும் ஆப்கானிஸ்தான் அணியில் இரட்டை இலக்கத்தை தொடவில்லை.

இதன் மூலம் 142 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மெகா வெற்றியை ருசித்தது. வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் 6.2 ஓவர்களில் 2 மெய்டனுடன் 18 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். ஷகீன் ஷா அப்ரிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.


Next Story