ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீரர் சுப்மன் கில் 5-வது இடத்திற்கு முன்னேற்றம்


ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீரர் சுப்மன் கில் 5-வது இடத்திற்கு முன்னேற்றம்
x

பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய தரப்பில் டாப்-10 இடத்திற்குள் குல்தீப் யாதவ் மட்டுமே உள்ளார்.

துபாய்,

ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில் ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (886 புள்ளி) முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் வான்டெர் டசன் 2-வது இடத்திலும் (777 புள்ளி), பாகிஸ்தானின் பஹர் ஜமான் 3-வது இடத்திலும் (755 புள்ளி), இமாம் உல்-ஹக் 4-வது இடத்திலும் (745 புள்ளி) உள்ளனர்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் 85 ரன்கள் சேர்த்த இந்தியாவின் சுப்மன் கில் இரு இடம் முன்னேறி 5-வது இடத்தை (743 புள்ளி) பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 3 ஆட்டங்களிலும் அரைசதம் அடித்த இஷான் கிஷன் 9 இடங்கள் உயர்ந்து 36-வது இடத்தையும், ஹர்திக் பாண்ட்யா 10 இடங்கள் எகிறி 71-வது இடத்தையும் பெற்றுள்ளனர். பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய தரப்பில் டாப்-10 இடத்திற்குள் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மட்டுமே உள்ளார். அவர் 14-ல் இருந்து 10-வது இடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளார்.

20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் 907 புள்ளிகளுடன் 'நம்பர் ஒன்' இடத்தில் கம்பீரமாக பயணிக்கிறார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (811 புள்ளி) 2-வது இடத்தில் இருக்கிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் அறிமுகமாகி நேர்த்தியாக விளையாடும் இந்தியாவின் திலக் வர்மா 46-வது இடத்தில் இருந்து தனது தரவரிசை கணக்கை தொடங்குகிறார். பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித்கான் முதலிடத்தில் தொடருகிறார்.


Next Story