வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: 2-வது ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தான் வெற்றி
வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சட்டோகிராம்,
ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று நடந்தது. 'டாஸ்' ஜெயித்த வங்காளதேச அணி பீல்டிங்கைதேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் ஆகியோர் களம் இறங்கினர்.
இருவரும் நிலைத்து நின்று ஆடி வலுவான தொடக்கம் அமைத்தனர். ஸ்கோர் 256 ரன்னாக உயர்ந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. 4-வது சதம் அடித்த ரமனுல்லா குர்பாஸ் 145 ரன்னில் (125 பந்து, 13 பவுண்டரி, 8 சிக்சர்) ஷகிப் அல்-ஹசன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 256 ரன்கள் திரட்டினர். ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட்டுக்கு எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும்.
அடுத்து வந்த வீரர்கள் நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய இப்ராகிம் ஜட்ரன் 100 ரன்னில் (119 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் கொடுத்து வெளியேறினார். 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய வங்காளதேச அணி 43.2 ஓவர்களில் 189 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 69 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் பசல்லா பரூக்கி, முஜீப் ரகுமான் தலா 3 விக்கெட்டும், ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் 17 ரன் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.