மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஒரே கேப்டன்... - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு முன்னாள் வீரர் வேண்டுகோள்


மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஒரே கேப்டன்... - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு முன்னாள் வீரர் வேண்டுகோள்
x

Image Courtesy: AFP

உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்வியை அடுத்து பாபர் ஆசம் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

கராச்சி,

கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியது. இதையடுத்து எழுந்த விமர்சனங்களை அடுத்து பாபர் ஆசம் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளுக்குமான கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் டி20 அணிக்கு ஷாகின் அப்ரிடியையும், டெஸ்ட் அணிக்கு ஷான் மசூத்தையும் கேப்டனாக நியமித்தது. இதையடுத்து ஷாகின் அப்ரிடி தலைமையில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4-1 என படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஒரே கேப்டன் நியமிக்கலாம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பாகிஸ்தான் அணிக்கு மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஒரே கேப்டன் இருக்க வேண்டும். மேலும், துணை கேப்டன் இருக்க வேண்டிய அவசியமில்லை. இது பொறுப்பில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் தெளிவான செய்தியை வழங்கும்.

அணியின் இயக்குனர் முஹம்மது ஹபீஸ் திறமையானவர் என்று நீங்கள் நினைத்தால், அவரை ஒரு தொடரை வைத்து மட்டும் மதிப்பிடாதீர்கள். அவருக்கு சரியான நேரத்தைக் கொடுங்கள். அது கேப்டனுக்கும் பொருந்தும். மேலும், அவர் அந்த பதவியில் மூன்று ஆண்டுகள் இருக்க வேண்டும்.

டி20 உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு மிகவும் கடினமான போட்டியாக இருக்கும். சில வலிமையான அணிகள் பட்டத்திற்கான வேட்டையில் உள்ளன. பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்ய சரியான நேரம் இது இல்லை என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story