'எங்களது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது'- வெற்றிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா சொன்ன தகவல்
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டொமினிகா,
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
171 ரன்கள் குவித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன் மூலம் அவர் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதை கைப்பற்றிய 8-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி 12 புள்ளிகளை பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதுடன் 2002-ம் ஆண்டில் இருந்து வெஸ்ட்இண்டீசிடம் தோற்றதில்லை என்ற பெருமையையும் தக்கவைத்தது.
வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், 'எங்களது பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட்இண்டீஸ் அணியை 150 ரன்னில் ஆல்-அவுட் செய்தது எங்களது வெற்றிக்கு வழிவகுத்தது. இந்த ஆடுகளத்தில் போகப்போக பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும், ரன்கள் எடுப்பது எளிதானதாக இருக்காது என்பது எங்களுக்கு தெரியும். இதனால் ஒருமுறை அதிக நேரம் பேட்டிங் செய்து ரன்களை சேர்ப்பது என்று தீர்மானித்து செயல்பட்டோம். நினைத்தப்படி 400 ரன்களுக்கு மேல் (421 ரன்கள்) எடுத்தோம். ஜெய்ஸ்வால் திறமை வாய்ந்த வீரர். அவர் கடந்த சில வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்து வருகிறார். அவர் புத்திச்சாலித்தனமாகவும், மனோதிடத்துடன் பேட்டிங் செய்தார். அவர் எந்தவொரு நிலையிலும் அச்சமடையவில்லை. அறிமுக போட்டியில் ஆடிய இஷான் கிஷன் ரன் கணக்கை தொடங்க வேண்டும் என்பதற்தாக தான் காத்திருந்து டிக்ளேர் செய்தோம்.
அஸ்வினும், ஜடேஜாவும் சிறப்பாக பந்து வீசினார்கள். அனுபவம் வாய்ந்த அவர்கள் அணிக்கு தொடர்ந்து நல்ல பங்களிப்பை அளித்து வருகின்றனர். குறிப்பாக அஸ்வின் பந்து வீச்சு அருமையாக இருந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்று விரும்பினோம். அதன்படி வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆடுகளம் குறித்து நாங்கள் அதிகம் கவலைப்படவில்லை. இந்த போட்டியில் கிடைத்த உத்வேகத்தை அடுத்த டெஸ்ட் போட்டிக்கு கொண்டு செல்ல முயற்சிப்போம். அடுத்த போட்டியில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து பரிசீலிப்போம்' என்றார்.
தோல்வி குறித்து வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் கருத்து தெரிவிக்கையில், 'தொடக்கம் முதலே நாங்கள் சரியாக செயல்படவில்லை. எங்கள் அணியினர் பேட்டிங்கில் சொதப்பியது பாதகத்தை ஏற்படுத்தியது. ஆடுகளத்தில் பந்து அதிகம் சுழலாவிட்டாலும், நான் போதிய ரன்கள் எடுக்காமல் ஆட்டம் இழந்தது ஏமாற்றம் அளித்தது. முதல் இன்னிங்சில் நாங்கள் விரைவில் அதிக விக்கெட்டை பறிகொடுத்தோம். நான் உள்பட சீனியர் வீரர்கள் எதிர்பார்த்தபடி பேட்டிங் செய்யவில்லை. அஸ்வின், ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி எங்களுக்கு நெருக்கடி அளித்தனர். இதனால் நாங்கள் எங்களது திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. அறிமுக வீரர் ஆலிக் அதானேஷ் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது' என்றார்.