உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு ஓவல் மைதானம் முழுமையாக தயார்படுத்தப்படவில்லை - முகமது ஷமி
உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு ஓவல் மைதானம் முழுமையாக தயார்படுத்தப்படவில்லை என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார்.
லண்டன்,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதி வருகின்றன.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா நேற்று களமிறங்கியது.
இறுதியில் 4ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 44 ரன்களுடனும், ரஹானே 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று (5-ம் நாள்) ஆட்டத்தின் இறுதிநாள் என்ற நிலையில் இந்தியா வெற்றிபெற இன்னும் 280 ரன்கள் தேவைப்படுகிறது. அதேவேளை ஆஸ்திரேலியா வெற்றிபெற இன்னும் 7 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இதனால் இன்றைய கடைசி நாள் ஆட்டத்திற்கு பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில், 4 ம் நாள் ஆட்டநேர முடிவுக்கு பின் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கூறுகையில், டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை ஆட்டம் செல்ல செல்ல ஆடுகளம் மெதுவாக இருக்கும். ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்த மைதானம் தயார்படுத்தப்படவில்லை என நான் நினைக்கிறேன். இந்த மைதானம் முழுமையாக தயாராகவில்லை. நாட்கள் செல்ல செல்ல மைதானம் டெஸ்ட் போட்டிக்கு ஏற்றார்போல் மாறும்.
டெஸ்ட் போட்டியின் முடிவு 5-ம் நாளின் கடைசி செஷனில் முடிவு செய்யப்படவேண்டும். இது தான் உண்மையான டெஸ்ட் போட்டி. கடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியுள்ளோம். இரு அணியும் கடுமையாக போராடியுள்ளது. நாளை நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும். இறுதிப்போட்டியில் நாங்கள் வெற்றிபெறுவோம் என எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இங்கிலாந்தில் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளிலும் நாங்கள் சிறப்பாக விளையாடியுள்ளோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை நாங்கள் இணைந்து வெல்லுவோம். நாம் சிறப்பாக பேட்டிங் செய்தால் 280 ரன்கள் என்பது எட்டக்கூடியது தான்' என்றார்