தென்னாப்பிரிக்கா டி20: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்...!
தென்னாப்பிரிக்க டி20 தொடரான எஸ்ஏ20 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
ஜொகனர்ஸ்பெர்க்,
இந்தியாவில் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போன்று தென்னாப்பிரிக்காவில் எஸ்ஏ 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
தென்னாப்பிரிக்க டி20 தொடரான எஸ்ஏ 20 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் நேற்று நடந்த முதல் அரையிறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - பெர்ல் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பெர்ல் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சால்ட், குசல் மெண்டஸ் களமிறங்கினர். சால்ட் 22 ரன்னிலும், மெண்டஸ் 7 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்த வந்த வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த இறுதியில் 20 ஓவர் முடிவில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரூசவ் 56 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிடலாம் என்ற நிலையில் பெர்ல் ராயல்ஸ் துவக்க வீரர்கள் ஜேசன் ராய், பால் ஸ்டர்லிங்க்ஸ் களமிறங்கினர். ராய் ரன் எதுவும் எடுக்காமலும், ஸ்டர்லிங்க்ஸ் 21 ரன்னிலும் வெளியேறினர்.
இறுதியில் 19 ஓவரில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்த பெர்ல் ராயல்ஸ் 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெர்ல் ராயல்ஸ் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.