இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 'ஆஸ்திரேலிய அணியில் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தது தவறு' - கிரேக் சேப்பல் கருத்து


இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தது தவறு - கிரேக் சேப்பல் கருத்து
x

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 'ஆஸ்திரேலிய அணியில் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தது தவறு' என்று கிரேக் சேப்பல் கூறியுள்ளார்.

சிட்னி,

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் ஆஸ்திரேலிய அணியில் வழக்கத்துக்கு மாறாக கூடுதலாக சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தது தவறாகும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் தெரிவித்தார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதுடன், பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்தது. இரண்டு டெஸ்டிலும் இந்திய சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 3-வது நாளிலேயே சுருண்டது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. தனது தாயார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் கேப்டன் கம்மின்ஸ் 3-வது டெஸ்டில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக ஸ்டீவன் சுமித் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துகிறார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியினர் மோசமான தோல்வியை சந்தித்ததால் அந்த அணி மீது விமர்சனங்கள் எழுந்து இருக்கின்றன. அந்த அணியினர் சூழ்நிலையை சரியாக புரிந்து துணிச்சலுடன் ஆடவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பலும் ஆஸ்திரேலிய அணியின் செயல்பாட்டை குறை சொல்லி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், 'இவான்டர் ஹோலிபீல்டுடனான மோதலுக்கு முன்னதாக அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் கூறுகையில் 'வாயில் குத்து விழுவது வரை ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம் இருக்கும்' என்றார். ஆஸ்திரேலிய அணியின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை பார்க்கையில் அவர் சொன்னது தான் எனது நினைவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய அணியினர் முதல் பந்தை எதிர்கொள்வதற்கு முன்பே தங்களை தானே வாயில் குத்திக்கொண்டனர். ஒரு தொடரை பொறுத்தமட்டில் திட்டமிடுதல் மிகவும் முக்கியமானது. குறைபாடுகளுடன் கூடிய திட்டம் பலனற்றதாகும்.

வெற்றியை வசப்படுத்த ஆஸ்திரேலிய அணி தங்களது பலத்திற்கு தகுந்தபடி விளையாட வேண்டியது அவசியமானதாகும். சுழற்பந்து வீச்சு நமது பலம் கிடையாது. இந்தியாவில் விளையாடுகிறோம் என்பதற்காக கூடுதலாக சுழற்பந்து வீச்சாளர்களை எடுத்தால் அது வெற்றிக்கு எந்தவகையிலும் உதவாது. ஆஸ்திரேலிய அணியின் பலம் வேகப்பந்து வீச்சாகும். நீங்கள் அணியின் சிறந்த பவுலர்களை ஆட வைப்பதுடன் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து ஊக்கம் அளிக்க வேண்டும். பேட்ஸ்மேன்களும் புத்திசாலித்தனமாக ஆடி அவர்களுக்கு பலம் சேர்க்க வேண்டும். வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலன்டை விடுத்து சுழற்பந்து வீச்சாளர் குனேமேனை ஆடும் லெவனில் சேர்த்தது தவறான முடிவாகும். கம்மின்ஸ் ஷாட் பிட்ச் பந்து வீச்சை சரியாக செய்யாததும் பாதகமாக அமைந்தது.

டெல்லி டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சூழ்நிலைக்கு தகுந்தபடி ஆபத்து குறைவான ஷாட்களை ஆடாமல் ஸ்வீப் ஷாட்டை அதிகம் நம்பி ஆடியது சரிவுக்கு வழிவகுத்தது. இந்திய சூழ்நிலையில் பேட்டிங் எப்படி ஆட வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியமானதாகும். முதல் இரண்டு மூன்று ஓவர்களில் தங்களை நிலைநிறுத்தி கொண்டு ஷாட் ஆட வேண்டும். இனி வரும் ஆட்டங்களில் முதலில் ஆஸ்திரேலியா சிறந்த அணியை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து உறுதியுடனும், துணிச்சலுடனும் தங்களுக்குரிய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இந்திய மண்ணில் ஆடுவது கடினம் என்பது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு தெரியும். ஒரு சிறந்த அணியால் தோற்கடிக்கப்படுவதை ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் பொறுப்பற்ற முறையில் ஆடி 3 நாட்களுக்குள் ஆட்டம் இழப்பதை எல்லாம் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வது கடினம்' என்றார்.


Next Story