ஐ.பி.எல். கிரிக்கெட் : 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி..!!
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
லக்னோ,
ஐ.பி.எல். தொடரின் இன்றைய 2வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். அதிரடி தொடக்கம் தந்த இணை முதல் விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்த நிலையில் மேயர்ஸ் 29 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ஹீடா 2 ரன்னில் வெளியேறினார்.
இதையடுத்து ராகுலுடன் குருணால் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் அரைசதம் அடித்தார். மறுமுனையில் குருணால் பாண்ட்யா 18 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரன் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இதையடுத்து ராகுலுடன் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஜோடி சேர்ந்தார்.
இதில் ஸ்டோய்னிஸ் 15 ரன்னிலும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் 74 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களமிறங்கிய கவுதம் 1 ரன்னிலும், யுத்வீத் சிங் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.
இறுதியில் லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக சாம் கரண் 3 விக்கெட்டுகளும், ரபடா 2 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங், பேரர் மற்றும் ராஸா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் சார்பில் அதர்வா டைட் மற்றும் பரப்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் டைட் (0) ரன் ஏதும் எடுக்காமலும், அவரைத்தொடர்ந்து பரப்சிம்ரன் சிங் 4 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய அதிரடி காட்டிய மேத்யூ ஷாட் 34 (22) ரன்களும், அவரைத்தொடர்ந்து ஹர்பிரித் சிங் பாட்டியா 22 ரன்களும், கேப்டன் சாம் கரண் 6 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சிக்கந்தர் ராஸா 34 பந்துகளில் ஐ.பி.எல்.-ன் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். இந்த சூழலில் இந்த ஜோடியில் ஜிதேஷ் சர்மா 2 ரன்னில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து அணியை வெற்றிபெற வைக்க போராடிக்கொண்டிருந்த சிக்கந்தர் ராஸா 57 (41) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹர்பிரித் பேரர் 6 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில் சிறப்பாக ஆடிய ஷாருக் கான் 23 (10) ரன்களும், ரபடா ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பஞ்சாப் அணி 19.3 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியின் சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட், ரவி பிஷ்னோய் மற்றும் யுத்வீர் சிங் சாரக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கவுதம், குர்ணால் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதன்மூலம் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.