வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து : 'பும்ரா சரியான வியூகங்களை வகுக்கவில்லை' - பீட்டர்சன் விளாசல்


வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து : பும்ரா சரியான வியூகங்களை வகுக்கவில்லை - பீட்டர்சன் விளாசல்
x

Image Tweeted By @ICC 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.

பர்மிங்கம்,

கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் எட்ஜ்பாஸ்டன் நகரில் உள்ள பர்மிங்கம் மைதானத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் சேர்த்தது. 132 ரன்கள் முன்னிலை பெற்றநிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து வெற்றிபெற இந்திய அணி 378 ரன்கள் நிர்ணயித்தது.

இந்த போட்டியின் முதல் 3 நாட்களிலும் ஆதிக்கம் செலுத்திவந்த இந்திய அணி நேற்று திணறியது. குறிப்பாக ஜோ ரூட் - பேர்ஸ்டோவ் ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். வெற்றிக்கு இன்னும் 100 ரன்களுக்கு கீழாகவே தேவைப்படும் நிலையில் இங்கிலாந்து அணியின் கைவசம் 7 விக்கெட்கள் உள்ளது.

இந்த நிலையில் நேற்றைய 4-வது நாள் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் பும்ரா சரியாக கேப்டன்சி செய்யவில்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது :

இன்று பும்ரா தனது தந்திரங்களை சரியாகப் பயன்படுத்தவில்லை. அதை நான் மிகுந்த மரியாதையுடன் சொல்கிறேன். பேட்ஸ்மேன்களால் சுலபமாக கணிக்க முடியும்படி பந்துவீசிவிட்டனர். அதுமட்டுமின்றி ஃபீல்டிங்கிலும் இந்தியா சரியான வியூகங்களை வகுக்கவில்லை.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடிய போதும், தொடர்ச்சியாக லாங் ஆன், லாங் ஆஃப் திசைகளில் ஃபீல்டர்களை பும்ரா நிற்கவைத்திருந்தார். அது பெரிய முட்டாள்தனம். கடைசி 15 - 20 ஓவர்களில் கூட ஃபீல்டர்களை முன்பு வரவைத்திருந்தால் பேர்ஸ்டோவுக்கு சிரமமாக இருந்து இருக்கும். அதையும் அவர்கள் செய்யவில்லை.

இவ்வாறு பீட்டர்சன் தெரிவித்தார்.


Next Story