ராகுல் பொறுப்பான ஆட்டம்...லக்னோ 159 ரன்கள் சேர்ப்பு...!
லக்னோ அணி தரப்பில் கேப்டன் கே.எல்.ராகுல் 74 ரன்கள் அடித்தார்.
லக்னோ,
ஐபிஎல் தொடரின் இன்றைய 2வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன. தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் இந்த ஆட்டத்தில் ஆட வில்லை. அவருக்கு பதிலாக பஞ்சாப் அணியை சாம் கர்ரன் வழிநடத்துகிறார்.
முன்னதாக இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். அதிரடி தொடக்கம் தந்த இணை முதல் விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்த நிலையில் மேயர்ஸ் 29 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ஹீடா 2 ரன்னில் வெளியேறினார்.
இதையடுத்து ராகுலுடன் க்ருணால் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் அரைசதம் அடித்தார். மறுமுனையில் க்ருணால் பாண்ட்யா 18 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரன் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இதையடுத்து ராகுலுடன் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஜோடி சேர்ந்தார்.
இதில் ஸ்டோய்னிஸ் 15 ரன்னிலும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் 74 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஆயுஷ் பதோனி களம் இறங்கினார். இறுதியில் லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. லக்னோ தரப்பில் ராகுல் 74 ரன்கள் அடித்தார். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் ஆட உள்ளது.