ராஸ் டெய்லரின் கன்னத்தில் அறைந்த ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்; சுயசரிதை புத்தகத்தில் தகவல்


ராஸ் டெய்லரின் கன்னத்தில் அறைந்த ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்; சுயசரிதை புத்தகத்தில் தகவல்
x

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் தனது சுயசரிதை புத்தகத்தில் மேலும் சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர், தனது சொந்த அணியிலேயே தன்னை சிலர் இனவெறியுடன் கேலி செய்ததாக சமீபத்தில் கூறி கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் அவர் தனது சுயசரிதை புத்தகத்தில் மேலும் சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். ஐ.பி.எல். அனுபவத்தை அதில் குறிப்பிட்டுள்ள டெய்லர், '2011-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தேன். இதில் மொகாலியில் நடந்த பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 195 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய போது, நான் எல்.பி.டபிள்யூ. ஆகி டக்-அவுட் ஆனேன். எங்களால் இலக்கை நெருங்க கூட முடியவில்லை. ஆட்டம் முடிந்து ஓட்டலுக்கு திரும்பிய போது, மேல் தளத்தில் உள்ள பாரில் வீரர்கள், உதவியாளர், அணி நிர்வாகத்தினர் அனைவரும் இருந்தனர்.

ஷேன் வார்னேவும் அங்கு இருந்தார். அப்போது ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் , 'ராஸ்.... நீங்கள் டக்-அவுட் ஆவதற்காக நாங்கள் கோடிக் கணக்கான ரூபாய் உங்கள் மீது முதலீடு செய்யவில்லை' என்று கூறி 3-4 தடவை முகத்தில் அறைந்து விட்டார். அடித்ததும் அவர் சிரித்தார். முகத்தில் விழுந்த அறை பலமாக இல்லை. ஆனாலும் விளையாட்டாக இவ்வாறு செய்தாரா என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. அன்றைய சூழலில் இதை நான் பிரச்சினையாக்கவில்லை' என்று கூறியுள்ளார்.


Next Story