வெளியேற்றுதல் சுற்று : ரஜத் படிதார் அபார சதம் - பெங்களூரு அணி 207 ரன்கள் குவிப்பு


வெளியேற்றுதல் சுற்று : ரஜத் படிதார் அபார சதம் - பெங்களூரு அணி 207 ரன்கள் குவிப்பு
x

Image Courtesy : Twitter @IPL 

லக்னோ அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த படித்தார் 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ராஜஸ்தானுடன் ஆமதாபாத்தில் 27-ந் தேதி நடக்கும் 2-வது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

தோல்வி பெறும் அணி வெளியேறும் என்பதால் லக்னோ, பெங்களூரு ஆகிய இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற கடும் முனைப்பு காட்டும். இந்த நிலையில் மைதானத்தில் லேசான மழை பெய்த காரணத்தால் இந்த போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. வழக்கமாக இரவு 7 மணிக்கு டாஸ் போடப்படும் நிலையில் இன்று 7.55 மணிக்கு டாஸ் போடப்பட்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

தொடக்க வீரர்களாக டு பிளெசிஸ் - கோலி களமிறங்கினர். மொஹ்சின் கான் வீசிய பந்தில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார் டு பிளெசிஸ். அவரை தொடர்ந்து ரஜத் படிதார் களமிறங்கினார். நிதானமாக விளையாடி வந்த கோலி 24 பந்துகளில் 25 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

ரஜத் படிதார் அரைசதம் கடந்து அசத்த மேக்ஸ்வெல் 9 ரன்களிலும் நடையைக்கட்டினார். அவரை தொடர்ந்து லோம்ரார் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு ரஜத் படிதார் உடன் ஜோடி சேர்ந்தார் தினேஷ் கார்த்திக். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக ரவி பிஷ்னாய் வீசிய 16-வது ஓவரில் ரஜத் படிதார் 26 ரன்கள் குவித்தார். தொடர்ந்து அதிரடிக்காட்டிய படிதார் 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். லக்னோ அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த படித்தார் - கார்த்திக் ஜோடியை பிரிக்க முடியாமல் பந்துவீச்சாளர்கள் திணறினர்.

கடைசி 5 ஓவர்களில் பெங்களூரு அணி 80 ரன்களுக்கு மேல் குவித்தது. இறுதியில் 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. படித்தார் 54 பந்துகளில் 112 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ அணி களமிறங்குகிறது.


Next Story