ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம்-சவுராஷ்டிரா இடையே இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது
ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம்-சவுராஷ்டிரா இடையே இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது
சென்னை,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் அபார பந்து வீச்சில் தமிழக அணி 2-வது இன்னிங்சில் 133 ரன்னில் சுருண்டது. இதனால் சவுராஷ்டிரா அணிக்கு 266 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
38 அணிகள் இடையிலான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு-சவுராஷ்டிரா அணிகள் மோதும் கடைசி லீக் ஆட்டம் (பி பிரிவு) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 324 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. பாபா இந்திரஜித், விஜய் சங்கர், ஷாருக்கான் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்து இருந்தது. சிராக் ஜானி 14 ரன்னுடனும், சேத்தன் சகாரியா 8 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய சேத்தன் சகாரியா 9 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரவீந்திர ஜடேஜா 15 ரன்னில் பாபா அபராஜித் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். நிலைத்து நின்று ஆடிய சிராக் ஜானி 49 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு வந்த வீரர்கள் நிலைக்கவில்லை. சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 79.4 ஓவர்களில் 192 ரன்னில் ஆட்டம் இழந்தது. தமிழக அணி தரப்பில் எம்.சித்தார்த், அஜித் ராம் தலா 3 விக்கெட்டும், சந்தீப் வாரியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
132 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி, சவுராஷ்டிரா வீரர்களின் மாயாஜால சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 36.1 ஓவர்களில் 133 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 37 ரன்னும், பாபா இந்திரஜித் 28 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். சவுராஷ்டிரா அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டும், தர்மேந்திரசிங் ஜடேஜா 3 விக்கெட்டும் சாய்த்தனர். வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 5 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்பிய முதல் போட்டியிலேயே ரவீந்திர ஜடேஜா முத்திரை பதித்துள்ளார்.
இதனை அடுத்து சவுராஷ்டிரா அணிக்கு 266 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 4 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய் கோஹில் ரன் எதுவும் எடுக்காமல் எம்.சித்தார்த் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஹர்விக் தேசாய் 3 ரன்னுடனும், சேத்தன் சகாரியா ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. சவுராஷ்டிரா அணி வெற்றிக்கு மேலும் 262 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணி கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளது. சுழற்பந்து வீச்சு எடுபடுவதால் சவுராஷ்டிரா அணியினர் தோல்வியை தவிர்ப்பது கடினமான காரியமாகும்.