ரஞ்சி கோப்பை கிரிக்கெட் : 129 ஆண்டு கால சாதனையை முறியடித்தது பெங்கால் அணி


ரஞ்சி கோப்பை கிரிக்கெட் : 129 ஆண்டு கால சாதனையை முறியடித்தது பெங்கால் அணி
x

Image Courtesy : Twitter @BCCIdomestic

129 ஆண்டு கால சாதனையை பெங்கால் அணியினர் தகர்த்து புதிய சாதனை படைத்தனர்.

பெங்களூரு,

87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4 கால்இறுதி ஆட்டங்கள் (5 நாள் ஆட்டம்) பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புறபகுதியில் கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. இதில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் பெங்கால் அணி ஜார்க்கண்டை எதிர்கொண்டது.

முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 773 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பெங்கால் அணியில் அபிஷேக் ராமன் (61 ரன்), கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் (65), சுதிப் கராமி (186), அனுஸ்துப் மஜூம்தார் (117), மனோஜ் திவாரி (73), அபிஷேக் போரெல் (68), ஷபாஸ் அகமது (78) ரன்கள் எடுத்தனர். இதேபோல், சயான் மொண்டல் 53 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 53 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், முதல்தர கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரு அணியில் 9 வீரர்கள் குறைந்தது 50 ரன்களுக்கு மேல் குவிப்பது இதுவே முதல் நிகழ்வாகும். இதற்கு முன்பு 1893-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அணிக்கு எதிரான முதல்தர போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் 8 வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் எடுத்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

இந்த 129 ஆண்டு கால சாதனையை பெங்கால் அணியினர் தகர்த்து புதிய சாதனை படைத்தனர். தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை ஆடிய ஜார்க்கண்ட் அணி 298 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் பெங்கால் அணி 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.


Next Story