பெண்கள் பிரீமியர் லீக் : முதல் வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி..!!


பெண்கள் பிரீமியர் லீக் : முதல் வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி..!!
x

உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.

மும்பை,

பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 13வது லீக் ஆட்டம் மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் உ.பி. வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ், ரன் குவிக்க திணறியது. துவக்க வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன் அலிசா ஹீலி ஒரு ரன்னிலும், தேவிகா வைத்யா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அடுத்து களமிறங்கிய கிரண் நவ்கிரே 22 ரன்கள் சேர்த்தார்.

அதன்பின் கிரேஸ் ஹாரிஸ், தீப்தி சர்மா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அதிரடியாக ஆடிய கிரேஸ் ஹாரிஸ் 46 ரன்களும், தீப்தி சர்மா 22 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

இறுதியில் உ.பி. வாரியர்ஸ் அணி 19.3 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் சிறப்பாக பந்து வீசிய எலிஸ் பெர்ரி 3 விக்கெட்டுகளும், ஆஷா சோபனா மற்றும் ஷோபி டிவைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் சார்பில் டிவைன் மற்றும் கேப்டன் மந்தனா ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் டிவைன் 14 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து மந்தனா (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி மீண்டும் சோபிக்கத் தவறினார். இதனையடுத்து களமிறங்கிய பெர்ரி 10 ரன்களும், ஹீத்தர் நைட் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



அடுத்ததாக கனிகா அகுஜா மற்றும் ரிச்சா கோஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. இந்நிலையில் கனிகா அகுஜா 46 (30) ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார்.

இறுதியில் அதிரடி காட்டிய ரிச்சா கோஸ் 31 (32) ரன்களும், ஸ்ரேயங்கா பாட்டீல் 5 (3) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பெங்களூரு அணி 18 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது. உ.பி. வாரியர்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.


Next Story