ரசிகர்களுக்கு விருந்து படைத்த ருதுராஜ்... சென்னை 178 ரன்கள் குவிப்பு...!
ஐபிஎல் தொடரின் இன்றைய தொடக்க ஆட்டத்தில் சென்னை-குஜராத் அணிகள் ஆடி வருகின்றன.
அகமதாபாத்,
16வது ஐபிஎல் சீசன் அகமதாபாத்தில் இன்று கோலாகமாக தொடங்கியது. இன்று நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் ஜெயித்த குஜராத் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ், கான்வே ஆகியோர் களம் இறங்கினர். இதில் கான்வே 1 ரன்னில் ஷமி போல்டு ஆனார். இதையடுத்து மொயீன் அலி களம் இறங்கினார். அதிரடியில் மிரட்டிய மொயீன் அலி 6வது ஓவரில் ரஷித் கான் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் தப்பித்தார். ஆனால் அதே ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பவர்பிளேயான முதல் 6 ஓவர்களில் சென்னை அணி 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன் எடுத்தது.
இதையடுத்து ருதுராஜ் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். அதிரடியில் மிரட்டிய ருதுராஜ் ஹர்த்திக்கின் ஓவரில் அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். மறுபுறம் ஸ்டோக்ஸ் 7 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து அம்பத்தி ராயுடு களம் இறங்கினார். அதிரடியில் மிரட்டிய ருதுராஜ் 23 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இதற்கிடையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அம்பத்தி ராயுடு 12 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து ஷிவம் துபே களம் புகுந்தார். ஷிவம் துபே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபுறம் அதிரடியில் மிரட்டிய ருதுராஜ் 50 பந்தில் 92 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ஜடேஜா 1 ரன்னில் வீழ்ந்தார். இதையடுத்து சென்னை அணியின் கேப்டன் தோனி களம் புகுந்தார்.
இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழபுக்கு 178 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் ருதுராஜ் 92 ரன்கள் குவித்தார். இதையடுத்து 179 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் ஆட உள்ளது.