பெண்கள் பிரிமீயர் லீக் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஆலோசகராக சானியா மிர்சா நியமனம்


பெண்கள் பிரிமீயர் லீக் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஆலோசகராக சானியா மிர்சா நியமனம்
x

பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஆலோசகராக பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு,


பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (மார்ச்) 4-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை மும்பையில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 5 அணிகளில் ஒன்றான பெங்களூரு அணியை, பெங்களூரு ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் ரூ.901 கோடிக்கு வாங்கி இருக்கிறது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சமீபத்தில் நடந்த ஏலத்தில் ஸ்மிர்தி மந்தனா (ரூ.3.4 கோடி) , ரிச்சா கோஷ் (ரூ.1.9 கோடி), ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி (1.7 கோடி), மேகன் ஸ்கட், நியூசிலாந்து கேப்டன் சோபி டெவின், இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட், தென்ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் டேன்வான் நீகெர்க் உள்பட 18 வீராங்கனைகளை வாங்கியது.

இந்த நிலையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஆலோசகராக ஆச்சரியம் அளிக்கும் வகையில், இந்த மாதத்துடன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் இந்திய நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சாவை அந்த அணி நிர்வாகம் நேற்று நியமித்தது. நியூசிலாந்து பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பென் சயெர் தலைமை பயிற்சியாளராகவும், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மலோலன் ரங்கராஜன் உதவி பயிற்சியாளராகவும், இந்திய முன்னாள் வீராங்கனை வி.ஆர்.வனிதா பீல்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆலோசகராக நியமிக்கப்பட்டது குறித்து 36 வயதான சானியா மிர்சா கூறுகையில், 'பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் பெண்கள் அணியின் ஆலோசகராக பணியாற்ற என்னை அணுகிய போது கொஞ்சம் ஆச்சரியம் அளித்தாலும், அணியினருடன் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் பிரபலமான அணியாகும். ஐ.பி.எல்.போட்டியில் பல ஆண்டுகளாக அதிகம் ரசிகர்களை கொண்ட அணியாக திகழ்கிறது. அவர்கள் பெண்கள் பிரிமீயர் லீக் போட்டிக்கு ஒரு அணியை உருவாக்கி இருப்பதை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இது நாட்டில் பெண்களின் விளையாட்டை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும். அத்துடன் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு புதிய வாய்ப்புக்கான கதவுகளை திறப்பதுடன், இளம் பெண்கள் விளையாட்டை முதல் விருப்பமாக தேர்வு செய்ய உதவிகரமாக இருக்கும். எத்தகைய கடினமான சவால்கள் நமக்கு எதிராக இருந்தாலும், அதனை எல்லாம் கடந்து இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக்கையை அடுத்த தலைமுறையினருக்கு ஏற்படுத்த உதவ விரும்புகிறேன்.

மனதளவில் வலுப்படுத்துவதில் இளம் வீராங்கனைகளுடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். கடந்த 20 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் நெருக்கடிக்கு மத்தியில் விளையாடிய அனுபவத்தை கொண்டு என்னால் மனரீதியான நம்பிக்கையை வீராங்கனைகளுக்கு கொண்டுவர உதவ முடியும் என்று நம்புகிறேன்' என்றார்.


Next Story