இந்திய கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒரு நாள் போட்டிக்கு தனித்தனி அணிகள் - கும்பிளே வலியுறுத்தல்


இந்திய கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒரு நாள் போட்டிக்கு தனித்தனி அணிகள் - கும்பிளே வலியுறுத்தல்
x

இந்திய கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒரு நாள் போட்டிக்கு தனித்தனி அணிகள் தேர்வு செய்ய வேண்டும் என்று இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து சாதிக்க இந்திய கிரிக்கெட்டில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கு தனித்தனி அணிகளை உருவாக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கும்பிளே வலியுறுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் மூன்று வடிவிலான (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) அணிக்கும் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். ரோகித், விராட் கோலி, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் பெரும்பாலும் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடுகிறார்கள்.

இந்த நிலையில் டெஸ்ட் மற்றும் வெள்ளைநிறபந்து கிரிக்கெட்டுக்கு (ஒரு நாள் மற்றும் 20 ஒவர்) வெவ்வேறு இந்திய அணிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து கும்பிளே கூறுகையில், 'நிச்சயம் இந்தியாவுக்கு தனித்தனி அணிகள் தேவையாகும். 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு அதற்குரிய பிரத்யேகமான வீரர்கள் அவசியமாகும். தற்போதைய இங்கிலாந்து அணி இந்த மாதிரி தான் உள்ளது. கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணி கூட அப்படி தான் இருந்தது. குறிப்பாக நிறைய ஆல்-ரவுண்டர்கள் இருக்க வேண்டும். அதுவும் பேட்டிங் ஆல்-ரவுண்டராக இருப்பது கூடுதல் சிறப்பு. இங்கிலாந்து அணியை பாருங்கள். 7-வது வரிசையில் லியாம் லிவிங்ஸ்டன் ஆடுகிறார். வேறு எந்த அணியிலும் 7-வது வரிசையில் இப்படிப்பட்ட ஒரு தரமான வீரரை பார்க்க முடியாது. இதே போல ஆஸ்திரேலிய அணியில் 6-வது வரிசையில் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆடுகிறார். இது போன்ற ஒரு அணியை உருவாக்க வேண்டும். அத்தகைய வீரர்களை தேடிப்பிடித்து அணியில் சேர்க்க வேண்டும்.

அதே சமயம் வெவ்வேறு கேப்டன்கள், தனித்தனி பயிற்சியாளர்கள் தேவையா என்ற விஷயத்தில் என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஏனெனில் இது, எப்படிப்பட்ட அணியை தேர்வு செய்யப்போகிறீர்கள்? அதில் எந்த மாதிரி ஆதரவு அளித்து கேப்டன்ஷிப்பை யாருக்கு கொடுக்கப் போகிறீர்கள் என்பதை சார்ந்த விஷயமாகும்' என்றார்.

இது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்-ரவுண்டர் டாம் மூடி கூறும் போது, 'ஒவ்வொரு வடிவிலான போட்டிக்குரிய அணிகளுக்கு தனித்தனி பயிற்சியாளர்களை நியமிப்பது குறித்து சர்வதேச அணிகள் தீவிரமாக யோசிக்க வேண்டியது நேரம் இது. இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு பிரன்டன் மெக்கல்லமும், வெள்ளை நிற பந்து போட்டிக்கான அணிக்கு மேத்யூ மோட்டும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் அணியை மிகவும் வலுவானதாக உருவாக்கி இருக்கிறார்கள்' என்றார்.


Next Story