ஷாஹீன் அப்ரிடி விலகல் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய நிம்மதி - பாகிஸ்தான் முன்னாள் வீரர் சூசகம்


ஷாஹீன் அப்ரிடி விலகல் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய நிம்மதி - பாகிஸ்தான் முன்னாள் வீரர் சூசகம்
x

Image Courtesy : AFP 

தினத்தந்தி 21 Aug 2022 5:03 AM GMT (Updated: 21 Aug 2022 5:11 AM GMT)

ஷாஹீன் அப்ரிடி விலகல் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய நிம்மதி என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

துபாய்,

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. இதில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பரம போட்டியாளர்களான இந்தியாவும், பாகிஸ்தானும் 28-ந்தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி காயம் காரணமாக இந்த போட்டி தொடரிலிருந்து விலகியுள்ளார்.பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக கருதப்படும் ஷாஹீன் அப்ரிடி விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது

இந்த நிலையில் ஷாஹீன் அப்ரிடி விலகலால் இந்திய அணியின் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய நிம்மதி எனக் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

ஷஹீனின் காயம் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய நிம்மதி.ஆசிய கோப்பை போட்டியில் அவரைப் பார்க்க முடியாமல் போனது வருத்தமாக இருக்கிறது விரைவில் உடல் தகுதி பெறுங்கள் ஷாஹீன்'' என அவர் பதிவிட்டிருக்கிறார்.

கடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, கே.எல். ராகுல், ஆகியோரை விரைவில் வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலைய வைத்தவர் ஷாஹீன் அப்ரிடி.

இதனால் வரவிருக்கும் ஆசியக் கோப்பை தொடரிலும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷாஹீன் அப்ரிடி மீண்டும் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை பந்துவீச்சில் மிரட்டுவாரா அல்லது இந்திய பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சில் ரன்கள் குவித்து பதிலடி கொடுப்பார்களா என்பதை பார்க்க காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Next Story