கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 'டைம்டு அவுட்' முறையில் அவுட் கொடுக்கப்பட்ட வீரரானார் மேத்யூஸ்


கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக டைம்டு அவுட் முறையில் அவுட் கொடுக்கப்பட்ட வீரரானார் மேத்யூஸ்
x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை - வங்காளதேச ஆட்டம் நடைபெற்று வருகிறது.

டெல்லி,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய 38வது லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேசம் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசாங்கா, குசல் பரேரா களமிறங்கினர். பரேரா 4 ரன்னில் அவுட் ஆனார். அடுத்துவந்த மெண்டிஸ் 19 ரன்னில் அவுட் ஆனார். நிதானமாக ஆடிய நிசங்கா 41 ரன்னில் அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமரவிக்ரமா 42 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷகீப் பந்துவீச்சில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.

அடுத்த வீரராக மேத்யூஸ் களமிறங்கினார். மேத்யூஸ் களத்திற்குள் நுழைந்தபோது அவரது ஹெல்மெட்டில் ஏதோ பிரச்சினை இருந்துள்ளது. இதை கவனித்த மேத்யூஸ் பேட்டிங் செய்யாமல் தனது ஹெல்மெட்டை மாற்ற களத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனால், அவர் 2 நிமிடங்களுக்கு மேல் பேட்டிங் செய்யாமல் களத்திலேயே நின்றுள்ளார். அப்போது டைம் அவுட் முறையில் மேத்யூசை அவுட் என அறிவிக்க வேண்டுமென, வங்காளதேச கேப்டன் ஷகீப் அல்-ஹசன் நடுவரிடம் முறையிட்டார். இதனை தொடர்ந்து டைம் அவுட் முறையில் மேத்யூஸ் அவுட் ஆனதாக நடுவர் அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மேத்யூஸ் ஒருபந்து கூட விளையாடாமல் (0) ரன்னில் அவுட் ஆனார். மேலும், கிரிக்கெட் வரலாற்றில் டைம் அவுட் முறையில் அவுட் ஆன முதல் வீரரானார் மேத்யூஸ்.

டைம் அவுட் முறை அவுட்:

விக்கெட் விழுந்த உடன் களத்திற்கு புதிதாக வரும் பேட்ஸ்மேன் 2 நிமிடங்களில் தயாராக இருக்கவேண்டும். 2 நிமிடங்களில் பேட்டிங் செய்ய தயாராகவில்லையென்றால் அந்த வீரரை டைம்டு அவுட் முறையில் அவுட் ஆக அறிவிக்கலாம் என ஐசிசி விதி உள்ளது. அந்த விதியின் அடிப்படையில் முதல் வீரராக மேத்யூஸ் அவுட் என அறிவிக்கப்பட்டுள்ளார்.



Next Story