உலக கோப்பை: இந்திய அணியில் மாற்று வீரர்களாக முகமது சிராஜ், முகமது ஷமி, ஷர்துல் தாக்குர் சேர்ப்பு


உலக கோப்பை: இந்திய அணியில் மாற்று வீரர்களாக முகமது சிராஜ், முகமது ஷமி, ஷர்துல் தாக்குர் சேர்ப்பு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 12 Oct 2022 9:52 PM GMT (Updated: 12 Oct 2022 9:53 PM GMT)

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் மாற்று வீரர்களாக முகமது சிராஜ், முகமது ஷமி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்று பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகுபகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அணியில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் யார்? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்திய அணியில் மாற்று வீரர்களாக வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர், முகமது ஷமி, பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர், சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் ஆகியோர் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கணுக்காலில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரின் கணுக்கால் காயம் குணமடைந்து விட்டாலும், முதுகுவலி பிரச்சினை ஏற்பட்டு இருப்பதால் அவரால் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்று வீரர்கள் பட்டியலில் புதிதாக வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாற்று வீரர்களான முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர் ஆகியோர் இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கின்றனர். அவர்களில் ஒருவருக்கு பிரதான அணியில் இடம் கிடைக்கும். மற்ற மாற்று வீரர்களான ஸ்ரேயாஸ் அய்யர், ரவி பிஷ்னோய் ஆகியோர் தற்போது ஆஸ்திரேலியா செல்லமாட்டார்கள் என்றும், தேவைப்பட்டால் அழைக்கப்படுவார்கள் என்றும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story