'ஹாட்ரிக்' வெற்றி முனைப்பில் தென்ஆப்பிரிக்க அணி: நெதர்லாந்துடன் இன்று மோதல்


ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் தென்ஆப்பிரிக்க அணி: நெதர்லாந்துடன் இன்று மோதல்
x

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்புடன் தென்ஆப்பிரிக்க அணி இன்று நெதர்லாந்தை சந்திக்கிறது.

தர்மசாலா,

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் உள்ள இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் 102 ரன்கள் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கையையும், 134 ரன்கள் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவையும் அடுத்தடுத்து வீழ்த்தி கம்பீரமாக வலம் வருகிறது. இலங்கைக்கு எதிராக 428 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த தென்ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 311 ரன்கள் எடுத்ததுடன் அந்த அணியை 177 ரன்களில் அடக்கி எளிதில் வெற்றியை வசப்படுத்தியது.



ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் குயின்டான் டி காக் (2 சதம் உள்பட 209 ரன்கள்), வான்டெர் டஸன் (ஒரு சதம்), மார்க்ரம் (ஒரு சதம், ஒரு அரைசதம்) பட்டையை கிளப்பி வருகிறார்கள். பந்து வீச்சில் ககிசோ ரபடா, மார்கோ யான்சென், இங்கிடி, கேஷவ் மகராஜ் அசத்துகிறார்கள்.

நியூசிலாந்து, இந்திய அணிகளை போல் தொடர்ந்து 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) ருசிக்கும் உத்வேகத்துடன் தென்ஆப்பிரிக்க அணி களம் இறங்குகிறது.

ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே 81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடமும், 99 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடமும் பணிந்தது.

நெதர்லாந்து அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு எதிர்பார்த்தபடி அமையவில்லை. பேட்டிங்கில் விக்ரம்ஜித் சிங், ஸ்காட் எட்வர்ட்சும், பந்து வீச்சில் பால் வான் மீக்ரென், வான்டெர் மெர்வ், ஆர்யன் தத்தும், ஆல்-ரவுண்டராக பாஸ்ட் டி லீட், காலின் அகேர்மானும் ஓரளவு நன்றாக ஆடுகிறார்கள். நடப்பு தொடரில் வெற்றி கணக்கை தொடங்க நெதர்லாந்து எல்லா வகையிலும் தீவிரமாக முயற்சிக்கும். இருப்பினும் பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்காவை சமாளிப்பது கடினம் தான்.

மழை பெய்ய வாய்ப்பு

சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 6-ல் தென்ஆப்பிரிக்கா வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. உலகக் கோப்பையில் இவ்விரு அணிகள் மோதிய 3 ஆட்டங்களிலும் தென்ஆப்பிரிக்காவே வென்றுள்ளது.

தர்மசாலாவில் கடந்த 2 நாட்களாக மாலையில் லேசான மழை பெய்தது. இதேபோல் இன்று பிற்பகலிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், தெம்பா பவுமா (கேப்டன்), வான்டெர் டஸன், மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், ககிசோ ரபடா, கேஷவ் மஜராஜ், இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி அல்லது ஜெரால்டு கோட்ஜி.

நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ டாவ்ட், காலின் அகேர்மான், பாஸ் டி லீட், தேஜா நிதாமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), சைபிரான்ட் இங்கில் பிரிட், வான்டெர் மெர்வ், லோகன் வான் பீல் அல்லது ரியான் கிளென், ஆர்யன் தத், பால் வான் மீக்ரென்.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story