பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேற்றம்


பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேற்றம்
x

2-வது தோல்வியை தழுவியதுடன், ரன்ரேட்டிலும் பின்தங்கியதால் இலங்கை அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து மூட்டையை கட்டியது.

போலந்து பார்க்,

பெண்கள் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் இரவு 'ஏ' பிரிவில் அரங்கேறிய லீக்கில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் மல்லுக்கட்டின. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 3 விக்கெட்டுக்கு 162 ரன்கள் குவித்தது. சுசி பேட்ஸ் (56 ரன்), அமெலியா கெர் (66 ரன்) அரைசதம் அடித்தனர்.

அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி 15.5 ஓவர்களில் 60 ரன்னில் முடங்கியது. கேப்டன் சமாரி அட்டப்பட்டு (19 ரன்), மால்ஷா ஷிஹானி (10 ரன்) தவிர வேறு யாரும் அந்த அணியில் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. நியூசிலாந்து தரப்பில் அமெலியா கெர், லியா தஹூஹூ தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதன் மூலம் 102 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை ருசித்த நியூசிலாந்து அணி அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்தது.

2-வது தோல்வியை தழுவியதுடன், ரன்ரேட்டிலும் பின்தங்கியதால் இலங்கை அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து மூட்டையை கட்டியது. 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணி ஒரு போதும் லீக் சுற்றை தாண்டியதில்லை. அந்த பரிதாபம் இந்த முறையும் தொடருகிறது.

'ஏ' பிரிவில் இன்று நடக்கும் கடைசி லீக்கில் தென்ஆப்பிரிக்க அணி வங்காளதேசத்தை சாய்த்தால் தென்ஆப்பிரிக்கா அரைஇறுதிக்கு தகுதி பெறும். தென்ஆப்பிரிக்கா தோற்றால் நியூசிலாந்துக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.


Next Story