உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நிறுத்தவும்...!! காலிஸ்தானிய பயங்கரவாதி மிரட்டல்


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நிறுத்தவும்...!! காலிஸ்தானிய பயங்கரவாதி மிரட்டல்
x

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு மிரட்டல் விடுத்த சிங்குக்கு எதிராக கடந்த செப்டம்பரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

ஆமதாபாத்,

10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்களில் இந்திய அணி நியூசிலாந்தையும், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்நிலையில் புதிய உலக சாம்பியன் யார் என தீர்மானிக்கும் தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் உள்ளது. அதேவேளையில் தனது 6வது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணி ஆட உள்ளது.

இந்நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை நிறுத்தும்படி காலிஸ்தானிய பயங்கரவாதி மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட, சீக்கியர்களுக்கான நீதி என பொருள்படும் சீக்ஸ் பார் ஜஸ்டிஸ் என்ற தடை செய்யப்பட்ட காலிஸ்தானிய அமைப்பின் நிறுவனர் குர்பத்வந்த் சிங் பன்னுன். அவர், வீடியோ ஒன்றை வெளியிட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்தி உள்ளார்.

அதில், ஆமதாபாத் நகரில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையே நாளை நடைபெறவுள்ள ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை நிறுத்தும்படி மிரட்டல் விடுத்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடைபெறும் போரில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றியும் வீடியோவில் அவர் பேசியுள்ளார். 1984-ம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் வன்முறை ஆகியவற்றை பற்றியும் வீடியோவில் அவர் பேசியுள்ளார். முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினரை தூண்டி விடும் ஒரு முயற்சியையும் அவர் மேற்கொண்டது வெளிப்பட்டது.

இதுபோன்ற மிரட்டல் வீடியோவை பன்னுன் வெளியிடுவது இது முதன்முறையல்ல. கடந்த அக்டோபரில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போரில் இருந்து பிரதமர் மோடி கற்று கொள்ள வேண்டும் என அவர் மிரட்டும் வகையில் பேசினார்.

பஞ்சாப் முதல் பாலஸ்தீனம் வரை சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள மக்கள் எதிர்வினையாற்றுவார்கள். வன்முறையில் இருந்து வன்முறை பிறக்கிறது என்றும் அவர் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு மிரட்டல்கள் மற்றும் பகைமையை தூண்டும் வகையில் பேசினார் என்ற குற்றச்சாட்டுகளுக்காக கடந்த செப்டம்பரில் அவருக்கு எதிராக எப்.ஐ.ஆர். ஒன்றும் பதிவு செய்யப்பட்டு இருந்தது.


Next Story