ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட்; ஜேப்பியார் அணி 'சாம்பியன்'..!
பரிசளிப்பு விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர் முகேஷ் சவுத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகளை வழங்கினார்.
சென்னை,
இந்தியா சிமெண்ட்ஸ் சார்பில் பள்ளி அணிகளுக்கு இடையிலான 8-வது ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின், சென்னை மண்டலத்திற்கான இறுதி சுற்றில் ஜேப்பியார் மெட்ரிக் - லாலாஜி மெமோரியல் ஒமேகா பள்ளி அணிகள் மோதின.
இதில் முதலில் பேட் செய்த லாலாஜி அணி 19.5 ஓவர்களில் 101 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. சச்சின், அரிஷ் ரமலான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய ஜேப்பியார் அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வசப்படுத்தியது.
மோகன பிரசாத் 38 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டதுடன் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். ஜேப்பியார், லாலாஜி அணிகள் நெல்லையில் வருகிற 22-ந்தேதி தொடங்கும் 2-வது கட்ட போட்டிக்கு தகுதி பெற்றன.பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர் முகேஷ் சவுத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகளை வழங்கினார்.