மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ரெய்னா: நடப்பு சாம்பியன் அணியில் ஒப்பந்தம்- ரசிகர்கள் உற்சாகம்


மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ரெய்னா: நடப்பு சாம்பியன் அணியில் ஒப்பந்தம்- ரசிகர்கள் உற்சாகம்
x

Image Courtesy: PTI

தனது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக சுரேஷ் ரெய்னா மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ளார்.

அபுதாபி,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக வலம் வந்த சுரேஷ் ரெய்னா கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து அவர் ஐபிஎல் உட்பட இந்தியாவின் அனைத்து உள்நாட்டு தொடர்களில் இருந்தும் ஓய்வு பெறவதாக கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தார். அவரின் இந்த திடீர் அறிவிப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருந்தது.

இந்த நிலையில் தனது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக சுரேஷ் ரெய்னா மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புகிறார். இந்த மாதம் தொடங்க இருக்கும் அபுதாபி டி10 கிரிக்கெட் லீக்கில் நடப்பு சாம்பியனான டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாட சுரேஷ் ரெய்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் அபுதாபியில் நவம்பர் 23 அன்று தொடங்குகிறது. இறுதி போட்டி டிசம்பர் 4 அன்று நடைபெறுகிறது. 2017 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த தொடரின் 6-வது சீசன் தற்போது நடைபெற இருக்கிறது.

12 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸின் (சிஎஸ்கே) முதுகெலும்பாக இருந்த ரெய்னா, ஐபிஎல் வரலாற்றில் 205 ஆட்டங்களில் 5,528 ரன்களுடன் அதிக ரன்களை எடுத்தவர்களில் 5-வது இடத்தில் உள்ளார். சிஎஸ்கே அணிக்காக மட்டும் அவர் 4,687 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story