சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணிக்கு முதல் வெற்றி


சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணிக்கு முதல் வெற்றி
x

கோப்புப்படம்

சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

லக்னோ,

15-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூர், மொகாலி, இந்தூர், லக்னோ உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

லக்னோவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் தமிழ்நாடு-ஒடிசா (இ பிரிவு) அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஒடிசா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய தமிழக அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கேப்டன் பாபா அபராஜித் ஆட்டம் இழக்காமல் 63 ரன்கள் (42 பந்து, 7 பவுண்டரி) எடுத்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். 2-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். முதலாவது ஆட்டத்தில் சத்தீஷ்காரிடம் 6 ரன் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.

ராஜ்கோட்டில் நடந்த 'ஏ' பிரிவு ஆட்டம் ஒன்றில் மத்திபிரதேசத்துக்கு எதிராக 182 ரன் இலக்குடன் ஆடிய மும்பை அணி 17 ஓவர்களில் அதை எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மொகாலியில் நடந்த ஆட்டத்தில் (சி பிரிவு) கேரளா அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகாவை தோற்கடித்து தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்தது.


Next Story