டி20 கிரிக்கெட்; விராட் கோலியை களத்தில் கட்டி பிடித்த நபரால் பரபரப்பு


டி20 கிரிக்கெட்; விராட் கோலியை களத்தில் கட்டி பிடித்த நபரால் பரபரப்பு
x

விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.

இந்தூர்,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி முதல் ஆட்டத்தில், இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது.

இந்த போட்டியில், 14 மாத இடைவெளிக்கு பின்னர் விராட் கோலி அதிரடியாக விளையாடினார். ஆப்கானிஸ்தானை வீழ்த்த அணிக்கு உதவியாக இருந்ததுடன், பவுண்டரிகளை விளாசி பார்வையாளர்களின் கைதட்டல்களை அள்ளினார்.

இதனால், 15 பந்துகளில் 29 ரன்களை எடுத்து 181.25 ஸ்டிரைக் ரேட்டுடன் இருந்த அவர், கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரின் பெயரை போட்டி முழுவதும் ரசிகர்கள் உச்சரித்த நிலையில், ஒரேயொரு ரசிகர் களத்திற்குள் புகுந்து கோலியை கட்டி பிடித்து கொண்டார்.

பதிலுக்கு கோலியும் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார். 18-வது ஓவரின்போது இந்த சம்பவம் நடந்தது. இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. எனினும் பாதுகாப்பு விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக அந்த நபரை போலீசார் பிடித்து, துகோகஞ்ச் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

கோலியின் தீவிர ரசிகரான அந்நபர், பார்வையாளர்களின் வரிசையில் இருந்து வேலியில் ஏறி குதித்து, களத்திற்குள் நுழைந்துள்ளார். அவரிடம் போட்டிக்கான டிக்கெட் இருந்தது. அந்நபரிடம் விசாரணை நடந்து வருகிறது என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.


Next Story