டி20 உலக கோப்பை இறுதி போட்டி: இங்கிலாந்து அணிக்கு வாழ்த்து கூறிய பிரதமர்


டி20 உலக கோப்பை இறுதி போட்டி: இங்கிலாந்து அணிக்கு வாழ்த்து கூறிய பிரதமர்
x

டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் வாழ்த்து கூறியுள்ளார்.லண்டன்,


8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் முதல் சுற்று, 'சூப்பர்12' சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 'சூப்பர் 12' சுற்றுடன் வெளியேறியது. முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணியும், 2-வது அரைஇறுதியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் கோப்பை யாருக்கு என முடிவு செய்யும் இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.

2009-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது. இதேபோல் 2010-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி 3-வது முறையாக இறுதிபோட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

இந்த நிலையில், டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு இந்திய வம்சாவளி பிரதமரான ரிஷி சுனக் வாழ்த்து கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பாகிஸ்தானுக்கு எதிராக டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் விளையாடும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு நல்லதிர்ஷ்டம் உண்டாகட்டும். இங்கிலாந்து முழுவதும் உள்ள மற்ற ரசிகர்களுடன் சேர்ந்து நானும் உங்களை ஊக்கப்படுத்துகிறேன். நாங்கள் எல்லா வகையிலும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் என அவர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.


Next Story