ஷகிப் அல்-ஹசனுடன் மோதலா? - தமிம் இக்பால் பதில்


ஷகிப் அல்-ஹசனுடன் மோதலா? - தமிம் இக்பால் பதில்
x

image courtesy: AFP

களத்தில் ஷகிப் அல்-ஹசனுடனான உறவு குறித்து தமிம் இக்பால் பேட்டி அளித்துள்ளார்.

டாக்கா,

'வங்காளதேச கிரிக்கெட் அணியில் ஒரு நாள் போட்டி கேப்டன் தமிம் இக்பாலுக்கும், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான கேப்டன் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசனுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. வீரர்கள் ஓய்வறையில் ஆரோக்கியமான சூழல் இல்லை. இருவரிடம் பேசி பார்த்தேன். ஆனால் இப்போதைக்கு அவர்கள் இடையிலான கருத்து வேறுபாட்டை தீர்ப்பது எளிதான விஷயம் அல்ல என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் இந்த பிரச்சினையை ஆட்டத்தில் கொண்டு வரமாட்டோம் என்று உறுதி அளித்து இருக்கிறார்கள்' என்று வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் சில தினங்களுக்கு முன்பு கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் களத்தில் ஷகிப் அல்-ஹசனுடனான உறவு குறித்து நேற்று பேட்டி அளித்த தமிம் இக்பால், 'நானும், ஷகிப்பும் ஒன்றாக அமர்ந்து காபி குடிக்கிறோமா இல்லையா? என்பது முக்கியமல்ல. வங்காளதேச அணிக்குரிய சீருடையை அணியும் போது இருவரும் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறோம். அது தான் முக்கியமான விஷயம். ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனாக எப்போதும் அவரின் உதவியை பெறுகிறேன். டெஸ்ட் அணிக்கு ஏதாவது ஆலோசனை தேவைப்பட்டால் நான் வழங்குகிறேன். இதே போல் இருவரும் இணைந்து பேட்டிங் செய்யும் போது அல்லது விக்கெட் சரிந்த மகிழ்ச்சியை கொண்டாடும் போது நிச்சயம் இயல்பாக இருக்கிறோம்' என்றார்.


Next Story