உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் அணிகள்: 3 கிரிக்கெட் தொடர் நாளை தொடக்கம்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பாக தயாராகும் வகையில் பெரும்பாலான அணிகள் தங்களது கடைசி கட்ட போட்டிகளில் விளையாடுகின்றன.
கொழும்பு,
10 அணிகள் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு சிறப்பாக தயாராகும் வகையில் பெரும்பாலான அணிகள் தங்களது கடைசி கட்ட போட்டிகளில் விளையாடுகின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை (புதன்கிழமை) முதல் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. நாளை பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகளும் இந்த தொடரில் உள்ளன.
தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி டர்பனில் நாளை நடக்கிறது.
இதே போல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி நான்கு 20 ஓவர் மற்றும் 4 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது. இதன்படி இங்கிலாந்து-நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி செஸ்டர்- லீ- ஸ்டிரிட்டில் நாளை இரவு நடக்கிறது.