டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய அணியின் முக்கிய வீரர்கள் இவங்க தான்..... ரிக்கி பாண்டிங்


டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய அணியின்  முக்கிய வீரர்கள் இவங்க தான்..... ரிக்கி பாண்டிங்
x
தினத்தந்தி 1 Jun 2023 11:28 AM GMT (Updated: 1 Jun 2023 12:19 PM GMT)

இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சாம்பியன் கோப்பைக்காக மோத உள்ளன.

லண்டன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சாம்பியன் கோப்பைக்காக மோத உள்ளன.

இந்திய அணியில் ரிஷப் பண்ட், பும்ரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோரை தான் நம்பி உள்ளது.பந்து வீச்சில் ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. தற்போது 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இந்திய அணி துருப்பு சீட்டாக விராட் கோலி மற்றும் புஜாரா இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- இந்திய அணிக்கு எதிரான வியூகத்தில் கோலி குறித்து ஆஸ்திரேலிய அணியினர் நிச்சயம் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதில் சந்தேகமே இல்லை. அதே போல புஜாரா குறித்தும் நிச்சயம் பேசி வருவார்கள். அவர்கள் இருவரும் இந்திய அணியின் முக்கிய வீரர்கள். கடந்த காலங்களில் புஜாரா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி உள்ளார். இறுதிப் போட்டி நடைபெற உள்ள ஆடுகளமும் ஆஸ்திரேலியாவில் இருப்பது போல இருக்கலாம். அதனால் புஜாராவை விரைவாக அவுட் செய்வது அவர்களது இலக்காக இருக்கும். கடந்த சில வாரங்களாக விராட் கோலி அபார ஃபார்மில் இருக்கிறார் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அது டி20 கிரிக்கெட் என்றாலும் அவரது ஃபார்ம், ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாகும். தான் சிறந்த ஃபார்மில் இருப்பதாக அவரே என்னிடம் தெரிவித்தார். என பாண்டிங் கூறினார்.


Next Story