இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: சரிவில் இருந்து மீண்டது பாகிஸ்தான்


இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: சரிவில் இருந்து மீண்டது பாகிஸ்தான்
x

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி ஷகீல், சல்மானின் அரைசதத்தால் சரிவில் இருந்து மீண்டது.

காலே,

தனஞ்ஜெயா சதம்

இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி தொடக்க நாளில் 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்திருந்தது. துணை கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 94 ரன்களுடன் களத்தில் இருந்தார். முதல் நாளில் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று இலங்கை அணி தொடர்ந்து ஆடியது. அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடித்த தனஞ்ஜெயா டி சில்வா 6 ரன்னுக்கு அரைமணிநேரம் எடுத்துக் கொண்டார். அவருக்கு இது 10-வது சதமாகும். மறுமுனையில் ரமேஷ் மென்டிஸ் (5 ரன்), பிரபாத் ஜெயசூர்யா (4 ரன்), கசுன் ரஜிதா (8 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. தனஞ்ஜெயா 122 ரன்களில் (214 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். அணி 300-ஐ கடக்க உதவிய விஷ்வா பெர்னாண்டோ 21 ரன்களுடன் களத்தில் இருந்தார். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 95.2 ஓவர்களில் 312 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பாகிஸ்தானுக்கு 5 விக்கெட்

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. இமாம் உல்-ஹக் 1 ரன்னிலும், அப்துல்லா ஷபிக் 19 ரன்னிலும், ஷான் மசூத் 39 ரன்னிலும் வெளியேறினர். எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பாபர் அசாம் (13 ரன், 16 பந்து, 2 பவுண்டரி) இடக்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா வீசிய பந்தை தடுத்து ஆட முற்பட்ட போது விக்கெட் கீப்பர் சமரவிக்ரமாவிடம் பிடிபட்டார். சர்ப்ராஸ் அகமதுவும் (17 ரன்) நிலைக்கவில்லை. அப்போது பாகிஸ்தான் 101 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.

இந்த சூழலில் 6-வது விக்கெட்டுக்கு சாத் ஷகீலும், ஆஹா சல்மானும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். வேகமாக ரன் திரட்டிய இவர்கள் அரைசதத்தை கடந்தனர். இந்த ஜோடியை இலங்கை பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. பாகிஸ்தான் அணி 45 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சாத் ஷகீல் 69 ரன்களுடனும் (88 பந்து, 6 பவுண்டரி), ஆஹா சல்மான் 61 ரன்னுடனும் (84 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.

இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும், ரமேஷ் மென்டிஸ், ரஜிதா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இன்னும் 91 ரன்கள் பின்தங்கியுள்ள பாகிஸ்தான் இன்று 3-வது நாளில் விளையாடும்.


Next Story