ஆசிய கிரிக்கெட் போட்டி ஆகஸ்டு 31-ந்தேதி தொடக்கம் பாகிஸ்தான், இலங்கையில் நடக்கிறது


ஆசிய கிரிக்கெட் போட்டி ஆகஸ்டு 31-ந்தேதி தொடக்கம் பாகிஸ்தான், இலங்கையில் நடக்கிறது
x

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான், இலங்கையில் நடக்கிறது.

புதுடெல்லி,

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான், இலங்கையில் நடக்கிறது. இந்த போட்டி ஆகஸ்டு 31-ந்தேதி தொடங்கும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆசிய கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றிருந்த போதிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு சென்று விளையாட இந்தியா மறுத்தது. அதற்கு பதிலாக இந்த போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தானில் நடத்தப்படாவிட்டால், இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை புறக்கணிப்போம் என்று மிரட்டியது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சில ஆட்டங்களை பாகிஸ்தானிலும், இறுதிப்போட்டி உள்பட இந்தியா சம்பந்தப்பட்ட ஆட்டங்களை வேறு நாட்டிலும் நடத்தலாம் என்று புதிய பரிந்துரையை முன் வைத்தது. முதலில் அவர்களின் யோசனைக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் செவி சாய்க்கவில்லை. ஆனால் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால் தங்களது பரிந்துரையை ஏற்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிடிவாதம் காட்டியது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் யோசனைப்படி ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது என்ற முடிவுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வந்துள்ளது. இதனால் சில மாதங்களாக நீடித்த சிக்கல் தீர்ந்துள்ளது.

இலங்கை, பாகிஸ்தானில்...

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்டு 31-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறோம். இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 13 ஒரு நாள் போட்டிகள் நடக்கின்றன. 4 ஆட்டங்கள் பாகிஸ்தானிலும், எஞ்சிய 9 ஆட்டங்கள் இலங்கையிலும் நடைபெறும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. பாகிஸ்தானில் லாகூரிலும், இலங்கையில் கண்டி மற்றும் பல்லகெலேவிலும் போட்டிகள் நடைபெறும் என்று தெரிகிறது.

இதில் களம் இறங்கும் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்படுகிறது. ஒரு பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளமும், மற்றொரு பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தானும் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர்4 சுற்றில் தங்களுக்குள் மோதிய பிறகு அதில் இருந்து முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

15 ஆண்டுக்கு பிறகு...

பாகிஸ்தானில் 2008-ம் ஆண்டுக்கு பிறகு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தி கூறுகையில், 'எங்களது ரசிகர்கள் இந்திய அணியின் ஆட்டத்தை பாகிஸ்தான் மண்ணில் 15 ஆண்டுக்கு பிறகு கண்டுகளிக்க ஆர்வமாக இருந்தனர். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிலைமையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தங்களது அரசாங்கத்தின் ஒப்புதல் கிடைத்தால் மட்டும் எல்லை கடந்து விளையாட முடியும். போட்டியை சரியான திட்டமிடலுடன் சிறப்பான முறையில் நடத்துவதற்கு இலங்கை மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் கலந்தாலோசித்து செயல்படுவோம்' என்றார்.


Next Story