இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் இன்று நடக்கிறது
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தரோபாவில் இன்று நடக்கிறது.
தரோபா,
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. அடுத்ததாக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் 3 ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசிலும், கடைசி இரு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடைபெறுகிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய இளம் படையினர் இந்த தொடரில் களம் இறங்குகிறார்கள். ஜெய்ஸ்வால், திலக் வர்மா, முகேஷ்குமார் போன்ற வளரும் வீரர்களுக்கு தங்களது திறமையை காண்பித்து கவனத்தை ஈர்ப்பதற்கு இது அருமையான வாய்ப்பாகும். சூர்யகுமார் யாதவ் 20 ஓவர் கிரிக்கெட்டில் எப்போதும் வெளுத்து வாங்கி விடுவார். அதனால் அவரது அதிரடி ஜாலத்தை எதிர்பார்க்கலாம். ஒரு நாள் போட்டியில் அசத்திய சுப்மன் கில், இஷான் கிஷன் ஆகியோர் ரன்வேட்டையை தொடரும் முனைப்புடன் உள்ளனர்.
இரண்டு முறை உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியினர் குறுகிய வடிவிலான கிரிக்கெட்டில் மிரட்டக்கூடியவர்கள். அமெரிக்காவில் நடந்த 20 ஓவர் லீக் கிரிக்கெட்டின் இறுதிசுற்றில் 137 ரன்கள் குவித்த கையோடு நிகோலஸ் பூரன் அணியில் இணைந்துள்ளார். ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், பிரன்டன் கிங், கைல் மேயர்ஸ், ஹெட்மயர் ஆகியோரும் சாதகமான சூழல் உருவானால், எதிரணியின் பந்து வீச்சை வறுத்தெடுத்து விடுவார்கள். அதனால் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 25 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் இந்தியாவும், 7-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இன்றைய ஆட்டம் நடக்கும் பிரையன் லாரா ஸ்டேடியத்தில் தான் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா 351 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. அதனால் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஒத்துழைக்கும் என்று தெரிகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: சுப்மன் கில், ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் அல்லது ரவி பிஷ்னோய், முகேஷ்குமார், உம்ரான் மாலிக் அல்லது அவேஷ்கான்.
வெஸ்ட் இண்டீஸ்: பிரன்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், ஷாய் ஹோப், நிகோலஸ் பூரன், ஹெட்மயர், ரோமன் பவெல் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், ஜாசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்டு அல்லது ஒடியன் சுமித், அகில் ஹூசைன், அல்ஜாரி ஜோசப் அல்லது ஒஷானே தாமஸ்.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டி.டி. ஸ்போர்ட்ஸ், பொதிகை சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. வானிலையை பொறுத்தவரை லேசான மழை குறுக்கிட வாய்ப்புள்ளது. அங்கு இன்று மழை பெய்வதற்கு 40 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.