'டைம்டு அவுட்' விவகாரம்: விதிமுறையை பயன்படுத்தி முறையீடு செய்ததை எதிர்ப்பது சரியல்ல - ராகுல் டிராவிட்


டைம்டு அவுட் விவகாரம்: விதிமுறையை பயன்படுத்தி முறையீடு செய்ததை எதிர்ப்பது சரியல்ல - ராகுல் டிராவிட்
x

உலகக்கோப்பை தொடரில் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை வீரர் மேத்யூஸ் 'டைம்டு அவுட்' முறையில் ஆட்டமிழந்த விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெங்களூரு,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 279 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 280 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேசம் அணி 41.1 ஓவர்களில் 7 விக்கெட்டை மட்டும் இழந்து 282 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் இலங்கை அணி பேட்டிங் செய்தபோது இலங்கை வீரர் மேத்யூஸ் 'டைம்டு அவுட்' முறையில் ஆட்டமிழந்த விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்த சம்பவம் அரங்கேறியது.

விதிப்படி ஒரு வீரர் ஆட்டமிழந்தால் அடுத்து வரும் பேட்ஸ்மேன் 2 நிமிடங்களுக்குள் பந்தை எதிர் கொள்ள வேண்டும். மேத்யூஸ் உடனடியாக மைதானத்துக்கு வந்தாலும் பந்தை எதிர்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. அவரது ஹெல்மெட்டில் பிரச்சினை இருந்ததால் மாற்று ஹெல்மெட் கொண்டு வரும்படி மற்ற இலங்கை வீரர்களிடம் கூறினார்.

இதில் தாமதம் ஏற்பட்டதால் வங்காளதேச கேப்டன் ஷகிப்-அல்-ஹசன், நடுவர்களிடம் அதை சுட்டிக்காட்டி அவுட் கேட்டார். இதையடுத்து மேத்யூசுக்கு 'டைம்டு அவுட்' முறையில் அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் அவர் அதிருப்தியுடன் வெளியேறினார். இதனால் பலரும் வங்காளதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனை விமர்சித்து வருகிறார்கள்.

இதுபற்றி பெங்களூருவில் இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து ராகுல் டிராவிட் கூறுகையில், இங்கு சரியோ, தவறோ இல்லை. ஒவ்வொருவரின் எண்ணங்களும் வித்தியாசமானவை. நாம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சிந்தனைகள் உள்ளன. அதேபோல் எண்ணங்களும் வேறு. யாரேனும் ஒருவர் விதியை அறிந்து அதனை பயன்படுத்தினால், அதை எதிர்ப்பது சரியல்ல. விதிகளுக்கு உட்பட்டுதான் அவர் முறையீடு செய்தார். இதனை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இதில் கிரிக்கெட் உத்வேகத்துக்கு இடமில்லை என்று கூறினார்.


Next Story