டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த விதியை மாற்ற வேண்டும் - அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் கோரிக்கை...!


டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த விதியை மாற்ற வேண்டும் - அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் கோரிக்கை...!
x

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த விதியை மாற்ற வேண்டும் என அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கராச்சி,

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் கராச்சியில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 449 ரன்களும், பாகிஸ்தான் 408 ரன்களும் குவித்தன 41 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 277 ரன்களுடன் 'டிக்ளேர்' செய்து 319 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

சவாலான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 4-வது நாள் முடிவில் ரன் கணக்கை தொடங்கும் முன்பே 2.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சிக்குள்ளானது. இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து 6-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமதுவும், சாத் ஷகிலும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். கடைசி 8 ஓவர்களுக்கு பாகிஸ்தானின் வெற்றிக்கு 33 ரன் தேவைப்பட்டது. சிறிது நேரத்தில் சர்ப்ராஸ் அகமது 118 ரன்களில் (176 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தார்.

இறுதியாக வெற்றிக்கு 15 ரன் தேவை, 3 ஓவர் எஞ்சியிருந்தது. இப்படிப்பட்ட திரில்லிங்கான சூழலில் சூரியன் மறைந்து வெளிச்சம் குறைந்ததால், அத்துடன் ஆட்டத்தை முடித்துக் கொள்ள நடுவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 90 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது.

முன்னதாக முதலாவது டெஸ்டும் டிராவில் முடிந்திருந்ததால் 2 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற அதிகப்படியான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் நடுவர்கள் வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தனர்.

இதனையடுத்து சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து நியூசிலாந்து அணியினர் பந்து வீசினார்கள். இதனை பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் சிக்சர், பவுண்டரி என அடிக்க ஆட்டம் அப்படியே பாகிஸ்தான் பக்கம் சென்றது. எனினும் போதிய வெளிச்சம் இல்லை என்று போட்டியை நடுவர்கள் முடித்து விட்டனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டி வில்லியர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில்,

கிரிக்கெட் விதிகளில் இந்தக் குறை நீண்ட நாட்களாகவே இருக்கிறது. பந்து வீசும் அணி போதிய வெளிச்சம் இல்லாத நேரத்தில் சுழற்பந்துவீச்சை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நடுவர்கள் கூறுகிறார்கள். இதனை மாற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன். இதன் காரணமாக வெறும் சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து ஆட்டத்தை முடிக்க நிர்பந்தம் செய்யப்படுகிறார்கள்.

வேகப்பந்து வீச்சாளர்களை அறிமுகம் செய்யும் முறையை கொண்டு வர வேண்டும். வேகப்பந்துவீச்சை பயன்படுத்தி பந்து வீசும் அணி போட்டியை அதற்கு முன்பே முடித்து விடும். பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி பெற 5 ரன்கள் தான் இருக்கும் என்று வைத்துக் கொள்வோம். அப்போதாவது பந்து வீசும் அணி வேக பந்துவீச்சார்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.இல்லை என்றால் இது ஒரு தரப்புக்கு சாதகமாக போட்டி மாறிவிடுகிறது என்று டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.




Next Story