ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் திலக் வர்மா..! சாஹல் நீக்கம்


ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் திலக் வர்மா..! சாஹல் நீக்கம்
x

கோப்புப்படம் 

இதில் இருந்து தான் உலகக் கோப்பை போட்டிக்கு 15 பேர் கொண்ட அணி இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் திலக் வர்மா இடம் பிடித்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் நீக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து மீண்டு உடல் தகுதியை எட்டியிருக்கும் லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கின்றனர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட்

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 17-ந் தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி தொடங்கும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த போட்டியை பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் 4 ஆட்டங்கள் பாகிஸ்தானிலும், இறுதிப்போட்டி உள்பட 9 ஆட்டங்கள் இலங்கையிலும் நடைபெறுகிறது.

ஆசிய கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் (30-ந் தேதி) பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் முல்தானில் மோதுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் செப். 2-ந் தேதி கண்டியில் நடக்கிறது.

இந்திய அணி அறிவிப்பு

இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணி டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் கலந்தாலோசித்து 17 பேர் கொண்ட அணியை தேர்வு செய்தனர். இந்த கூட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மாவும் பங்கேற்றார்.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் சிறப்பாக செயல்பட்ட 20 வயது இடக்கை பேட்ஸ்மேன் திலக் வர்மா ஒருநாள் போட்டி அணிக்கு முதல்முறையாக தேர்வாகியுள்ளார்.

முதுகு காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தில் இருந்து குணமடைந்து இருப்பதால் அணிக்கு திரும்பி இருக்கிறார். இதேபோல் கடந்த மே மாதம் தொடையில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து இருந்த லோகேஷ் ராகுல் உடல் தகுதி பெற்று இருப்பதால் அணிக்கு தேர்வாகி இருக்கிறார். இதன் மூலம் கடந்த 2 வாரத்திற்கு மேலாக லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் அணிக்கு வருவார்களா, வரமாட்டார்களா என்ற 'சஸ்பென்ஸ்' முடிவுக்கு வந்தது. இருப்பினும் ராகுலுக்கு லேசான வலி இருப்பதால் மாற்று வீரராக சஞ்சு சாம்சனும் சேர்க்கப்பட்டுள்ளார்.

சாஹல் நீக்கம்

காயத்தில் இருந்து மீண்டு 11 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பி அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் அட்டகாசமாக பந்துவீசி தங்களது திறமையை நிரூபித்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் பிரதான சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தடாலடியாக நீக்கப்பட்டுள்ளார். மணிக்கட்டை பயன்படுத்தி பந்து வீசும் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவருக்கு மட்டும் இடம் என்று முடிவு செய்யப்பட்டதில் சாஹலை பின்னுக்கு தள்ளி குல்தீப் யாதவ் இடத்தை தக்கவைத்துள்ளார். 33 வயதான யுஸ்வேந்திர சாஹல் 72 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (187 விக்கெட்டுகள்) கைப்பற்றிய பவுராக திகழ்கிறார்.

ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்குர், அக்ஷர் பட்டேல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா. மாற்று வீரர்: சஞ்சு சாம்சன்.

இதில் இருந்து தான் உலகக் கோப்பை போட்டிக்கு 15 பேர் கொண்ட அணி இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story